பாதுகாப்பான இன்டெர்நெட் பேங்கிங் வழிமுறைகள்
நாடு முழுவதும் 32 லட்சம் டெபிட் கார்டுகளின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய ஆன்லைன் தகவல் திருட்டாகக் கருதப்படும் இந்த தகவலால், வங்கி பரிவர்தனைகளின் மீதான பாதுகாப்பு கேள்விக்குறியாக்கியுள்ளது.
இந்தசூழலில் இணையம் மற்றும் ஸ்மார்ட் போன் மூலம் வங்கி பரிவர்தனைகளை மேற்கொள்ளும்போது நாம் எச்சரிகையுடன் செயல்படுவது அவசியம். ஆன்லைன் வங்கி பரிவர்தனைகளின்போது நாம் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பார்க்கலாம்.
*ஆன்டி வைரஸ்:*
கணினிகளில் தகவல்கள் திருட்டைத் தடுக்க அங்கீகரிக்கப்பட்ட ஆன்டி வைரஸ் பயன்படுத்துவது நலம். இதன்மூலம் தகவல்களை திருடும்வகையில் இணையத்தில் உலவும் ஸ்பைவேர் தாக்குதலிலிருந்து தப்பிக்கலாம்.
*பொது வைஃபை பயன்பாடு:*
வங்கி பரிவர்தனைகளை பொது இடங்களில் உள்ள வைஃபை வசதிகள் மூலம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும். பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வைஃபை வசதி ஹேக்கர்களின் தாக்குதலுக்கு எளிதில் இலக்காகலாம். எனவே, அதுபோன்ற சூழலில் இன்டர்நெட் மற்றும் மொபைல் பேங்கிங் மற்றும் ஆன்லைன் பணபரிவர்தனைகளை மேற்கொள்வதைத் தவிர்த்து விடுதல் நலம்.
*ஸ்மார்ட்போன் இயங்குதளம்:*
பாதுகாப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்ட அப்டேட்டட் இயங்குதளங்களை உங்கள் ஸ்மார்ட் போன்களின் பயன்படுத்துங்கள். இதன்மூலம் உங்கள் ஸ்மார்ட் போன்களில் இன்ஸ்டால் செய்யப்படும் செயலிகள் மூலம் தகவல்கள் திருடப்படுவது தடுக்கப்படும். மேலும், ஸ்பைவேர் தாக்குதல்களில் இருந்து தப்பிக்கவும் முடியும்.
*பாஸ்வேர்ட்:*
உங்களது இன்டெர்நெட் மற்றும் போன் பேங்கிங் பாஸ்வேர்டுகளை சீரான இடைவெளியில் மாற்றுவது நல்லது. மேலும், பாஸ்வேட்ர்டுகளை அதிக இலக்கங்கள் கொண்டதாக கடினமானதாக இருக்கும் வகையில் அமைத்துக் கொள்வது நலம். உங்களது பாஸ்வேர்ட்டுகள் உள்ளிட்ட ரகசிய தகவல்களை எந்த வங்கிகளும் போன் மூலம் கேட்பதில்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். மேலும், உங்களது ரகசிய தகவல்களை கணினியில் சேமித்து வைத்திருந்தால், அது பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
*மொபைல் நோட்டிபிகேஷன்:*
உங்களது வங்கி கணக்கில் மேற்கொள்ளும் பண பரிவர்தனைகள் குறித்து வங்கிகள் அளிக்கும் தகவல்களை மொபைலில் எஸ்.எம்.எஸ். மூலமாக பெரும் மொபைல் நோட்டிபிகேஷன் வசதிக்காக பதிவு செய்து கொள்ளுங்கள். இதன்மூலம் உங்களது வங்கிக் கணக்கு குறித்த தகவல்களை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளலாம்.
*மெயிலர்:*
உங்கள் இமெயிலுக்கு வரும் மெயிலர்களில் குறிப்பிட்டுள்ள முகவரிகள் மூலம் இன்டெர்நெட் பேங்கிங் பக்கத்துக்குள் நுழைவதைத் தவிர்க்கவும். ஒவ்வொரு முறை இன்டெர்நெட் பேங்கிங் முகவரிக்குச் செல்லும்போதும் உங்கள் கைபட டைப் செய்து அந்த பக்கத்துக்கு செல்வது சிறந்தது. இதன்மூலம் போலியான நிறுவனங்களின் பெயரில் உங்கள் வங்கிக் கணக்கு தகவல்கள் திருடப்படுவது தடுக்கப்படலாம்.
*இணைய முகவரி:*
பொதுவாக இணைய முகவரிகள் “http” என்ற எழுத்துகளுடன் தொடங்கும். அதேநேரம் இன்டெர்நெட் *பேங்கிங் உள்ளிட்ட பாதுகாப்பான தளங்களின் முகவரி *‘‘https’’* *என்று தொடங்கும்.* ஒவ்வொரு முறையும் இதனை உறுதி செய்து கொள்ளுங்கள்.
*பிரவுசிங் சென்டர்கள்:*
பிரவுசிங் சென்டர்கள் மூலம் இணைய வங்கி பரிவர்தனைகளை மேற்கொள்வதைத் தவிர்க்கலாம். தவிர்க்கமுடியா சூழலில் பிரவுசிங் சென்டர்கள் மூலம் வங்கி பரிவர்தனைகளை மேற்கொண்டால் ஹிஸ்டரி மற்றும் கேச்செ போன்ற பதிவுகளை அழித்து விடுவது நலம்.
மேலும், உங்கள் நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் கணக்குகளை அவ்வப்போது சரிபார்த்துக் கொள்ளுங்கள். பெரும்பாலான வங்கிகள் நீங்கள் கடைசியாக உள்நுழைந்த தகவல்களை வழங்கும். இதன்மூலம் உங்கள் கணக்கில் வேறுயாரும் பயன்படுத்தவில்லை என்பதையும் உறுதி செய்துகொள்ளலாம்.
நன்றி: நூர் முகமது ஆசிரியர்