நெட் தேர்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
சி.பி.எஸ்.இ. நடத்தும் "நெட்' தேர்வுக்கு திங்கள்கிழமை முதல் நவம்பர் 16-ஆம் தேதி விண்ணப்பிக்கலாம்.
நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேரவும், உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும் தகுதி பெறவும் ஜூன், டிசம்பர் மாதங்களில் தேசிய அளவிலான தகுதித் தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்துகிறது. இதன்படி, 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு 2017 ஜனவரி 22-இல் நடத்தப்பட உள்ளது.
முதன் முறையாக யோகா பாடம்: வழக்கமாக, பொருளாதாரம், அரசியல் அறிவியல், தத்துவம், சமூகவியல், வரலாறு, ஆங்கிலம், கணினி அறிவியல் என 80-க்கும் அதிகமான பாடப் பிரிவுகளின் கீழ் நெட் தேர்வு நடத்தப்படும். இந்த முறை 100 பாடப் பிரிவுகளின் கீழ் நடத்தப்படுகிறது. இதில், யோகா பாடமும் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. யோகா பாடத் திட்டமும், முக்கிய அம்சங்களும் பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன.