திருட்டை தடுக்கும் படிப்பு!
உலகமே ஆன்லைனில் இயங்கும் காலமாக மாறிவிட்ட நிலையில், டிஜிட்டல் தகவல் திருட்டு, இணையதளத்தை முடக்குதல் மற்றும் பிறரது தகவல்களை திருடி விற்பனை செய்தல் போன்ற சைபர் குற்றங்களால், மிகப்பெரிய நிறுவனங்கள் மட்டுமின்றி, சாமானியரும் பாதிக்கப்படுகின்றனர்.
தகவல்களை பாதுகாத்துக்கொள்ள அதீத கவனம் செலுத்தப்படும் இத்தருணத்தில், ‘சைபர் செக்யூரிட்டி’ மற்றும் ‘டிஜிட்டல் பாரன்சிக்ஸ்’ படிப்புகள் முக்கியத்துவம் பெருகின்றன.
தேவையான திறன்கள்: படைப்புத்திறன், பகுப்பாய்வு சிந்தனை, தர்க்க ரீதியான சிந்தனை, அதிநுட்ப கவனம், சிக்கல் தீர்க்கும் திறன்கள், கிரகிக்கும் தன்மை, முன்முயற்சி, அர்ப்பணிப்பு, விபரங்களைத் தேடும் பாங்கு, விரைவான சிந்தனை, ஆழமான கணினி அறிவு உள்ளிட்ட திறன்களை பெற்றவர்கள், இந்த துறையில் நிச்சயம் சாதிக்க முடியும்.
என்ன படிக்கலாம்?
பி.டெக்., அல்லது பி.எஸ்சி., பட்டப்படிப்பாக, இணையதள பாதுகாப்பு படிப்பை மேற்கொள்வதற்கு, பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களை முதன்மை பாடங்களாக பயின்று 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்துறையில் முதுநிலை பட்டப்படிப்பை படிக்க விரும்பும் மாணவர்கள், பி.டெக்., அல்லது பி.எஸ்சி., படிப்பில் ஏதேனும் ஒரு தொழில்நுட்ப பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.
எங்கு படிக்கலாம்?
ஐ.ஐ.ஐ.டி., டெல்லி,
குஜராத் தடய அறிவியல் பல்கலைக்கழகம், காந்திநகர்
எம்.எஸ்., ராமையா பல்கலைக்கழகம், பெங்களூரு
அம்ரிதா பல்கலைக்கழகம், கோவை
கே.எல்., பல்கலைக்கழகம், குண்டூர்
தவிர, பல தனியார் பயிற்சி நிறுவனங்களில் சான்றிதழ் மற்றும் டிப்ளமோ படிப்புகளாகவும் வழங்கப்படுகின்றன.
வாய்ப்புகள்: அரசு மற்றும் தனியார் துறைகள் ஆகிய இரண்டிலும் இத்துறை சார்ந்த பணி வாய்ப்புகள் அதிகம். ராணுவம், பாதுகாப்பு அமைப்புகள், தடய அறிவியல் ஆய்வகங்கள், ஐ.டி. நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், கன்சல்டிங் நிறுவனங்கள், வங்கிகள், விமானப் போக்குவரத்து மற்றும் சில்லறை வணிகம் என பல்வேறு துறைகளில் பணி வாய்ப்புகள் உள்ளன. பொதுவாக, இத்துறை சார்ந்தவர்கள் ஆண்டுக்கு ரூபாய் 3 லட்சம் முதல் 6.5 லட்சம் வரை சம்பாதிக்க முடியும். என்றபோதிலும், அனுபவத்திற்கும், தகுதிக்கும் மற்றும் பணிபுரியும் நிறுவனத்திற்கும் ஏற்ப சம்பளம் மாறுபடும்.