அனைத்து மாணவர்களின் சான்றிதழ்களும் சரிபார்க்க உத்தரவு.

அனைத்து மாணவர்களின் சான்றிதழ்களும் சரிபார்க்க உத்தரவு.
          பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாமலேயே, போலிச்சான்றிதழ் கொடுத்து, ஒன்றிரண்டு மாணவர்கள் பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்பில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

            இதையடுத்து, சேலம் மாவட்டத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் அனைத்து மாணவர்களின், பத்தாம் வகுப்பு சான்றிதழின் உண்மைத்தன்மையை கண்டறிய, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு, போலிச்சான்றிதழ் கொடுத்து, ஆசிரியர் பணியில் பலரும் சேர்க்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது, சேலம் மாவட்டத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களும் போலிச்சான்றிதழ் மூலம் மோசடி செய்து, படிப்பை தொடர்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கல்வித்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: கல்வியாண்டில் தேர்ச்சி பெற தவறிய மாணவர்கள், அதே கல்வியாண்டில் படிப்பை தொடர சிறப்பு துணைத்தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வின் முடிவு வெளியாக ஜூலை மாதம் ஆகிவிடுவதால், மதிப்பெண் பட்டியல் வழங்கும் முன்பே, அம்மாணவர்களுக்கு பள்ளிகளில் சேர்க்கை நடத்த வேண்டியுள்ளது. இதில்
, மதிப்பெண் சான்றிதழ்களில், மதிப்பெண்ணை மாற்றியமைத்து, போலிச்சான்றிதழ்களை உருவாக்கி, பல மாணவர்கள் பிளஸ் 1 வகுப்பில் சேர்ந்துள்ளதாக தெரிகிறது. பிளஸ் 2 தேர்வர் பட்டியல் தயாரிக்கப்படும் போது, மதிப்பெண் பட்டியலை சோதிக்கும் போது, தனியார் பள்ளியில் ஒரு மாணவர் சிக்கியுள்ளார். பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கூட, போலிச்சான்றிதழ் பயன்படுத்தும் கலாச்சாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். சேலம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஞானகவுரி, அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் அனைத்து மாணவர்களின், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களை சரிபார்ப்பதுடன், முந்தைய பள்ளி தலைமை ஆசிரியரிடமும் விசாரணை நடத்தி, அச்சான்றிதழின் உண்மைத்தன்மையை கண்டறிய வேண்டும். உண்மையில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாத எந்த மாணவரும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் படிக்க கூடாது என, கூறியுள்ளார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)