செவ்வாய் கிரகத்தில் தண்ணீரை உருவாக்க ஆய்வு: கருத்தரங்கில் தகவல்
செவ்வாய் கிரகத்தில் செயற்கையாகத் தண்ணீரை உருவாக்குவது உள்ளிட்ட ஆய்வுகள் நடைபெற்று வருகிறது என்றார் மகேந்திரகிரி திரவ உந்தும நிலையத்தின் விஞ்ஞானி டே
விட்தாசன்.
திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் விண்வெளி வார விழாவையொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் விஞ்ஞானி டேவிட்தாசன் பேசியதாவது:
விண்வெளித் துறையில் ஆய்வுகள் காலங்காலமாக தொடர்ந்துகொண்டே இருக்கும். மாணவர்கள் விண்வெளித் துறை குறித்த விழிப்புணர்வு அடைய வேண்டும். அதற்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் விண்வெளி வார விழா நடைபெறுகிறது.
இந்தியாவின் விண்வெளி செயல்பாடுகள், ஆய்வுகள் குறித்து மக்களுக்கு விளக்கப்படுகிறது. உலகளவில் விண்வெளி ஆய்வுகளில் போட்டிகளை எதிர்கொள்ளும் அளவுக்கு இந்தியா வளர்ச்சி பெற்றுள்ளது. இஸ்ரோவின் புதிய கண்டுபிடிப்புகள், ஏற்கெனவே செலுத்தப்பட்டுள்ள ராக்கெட்கள், செயற்கைக் கோள்கள் போன்றவை குறித்த விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றப்படுகின்றன. ஆய்வு மாணவர்கள் அவற்றை படித்து அறிந்து கொள்ள வேண்டும். செவ்வாய்க்கிரகம் குறித்த ஆய்வு விண்வெளித் துறையில் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அந்தக் கிரகத்தில் மீத்தேன் அதிகளவில் உள்ளது. இதுபோன்ற வாயுக்களைக் கொண்டு செயற்கையாகத் தண்ணீரை உருவாக்குவது குறித்தும் ஆய்வுகள் நடைபெறுகின்றன என்றார் அவர்.
கருத்தரங்கில் மாவட்ட அறிவியல் அலுவலர் கே.நவராம்குமார் தலைமை வகித்தார். கல்வி உதவியாளர் மாரிலெனின், மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.