கேட்’ தேர்வின் அடிப்படையில் என்ஜினீயர்களுக்கு வேலைவாய்ப்பு


        பல்வேறு மத்திய அரசு நிறுவனங்களில் ‘கேட்’ தேர்வின் மூலம் என்ஜினீயர்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.


இது பற்றிய விவரம் வருமாறு:–

என்ஜினீயரிங் மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு படித்தவர் களுக்கு முதுநிலை என்ஜினீயரிங் படிப்பில் சேர்வதற்காக ‘கேட்’   (நிகிஜிணி)   எனப்படும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. தற்போது பல்வேறு மத்திய அரசு நிறுவனங்கள் இந்த நுழைவுத் தேர்வை, தங்கள் பணியிடங்களை நிரப்பும் தகுதித் தேர்வாகவும் பயன்படுத்திக் கொள்கின்றன. 2017–ம் ஆண்டுக்கான ‘கேட்’ தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், பல்வேறு நிறுவனங்களும் இந்த தேர்வின் மூலம், என்ஜினீயரிங் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு வருகின்றன.


இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் முதலில் ‘கேட்’ தேர்வுக்கு விண்ணப்பித்து பதிவெண் பெற வேண்டும், பின்னர் அந்த பதிவெண் உதவியுடன் விண்ணப்பம் திறந்துள்ள பொதுத்துறை நிறுவனங்களின் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலும், நேர்காணல் நடத்தியும் பணி நியமனம் வழங்கப்படுகிறது.

கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க 4–10–2016–ந் தேதி கடைசி நாளாகும். இதுபற்றிய விவரங்களை   http://www.gate.iitr.ernet.in/ இணையதளத்தை பார்க்கலாம். 

இனி எந்தெந்த நிறுவனங்களில் ‘கேட்’ தேர்வின் அடிப்படையில் பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்பதை பார்ப்போம்...

பெல்

பாரத மிகுமின் நிறுவனம் சுருக்கமாக ‘பெல்’   (ஙிலீமீறீ)   எனப்படுகிறது. மின்உற்பத்தி, பகிர்மானம், மின்பொருள் உற்பத்தி உள்ளிட்ட பணிகளை கவனிக்கும் இந்த நிறுவனம் 2015–2016 ஆண்டில் 26 ஆயிரத்து 587 கோடி ரூபாய் வணிகம் செய்து உள்ளது. மகாரத்னா அந்தஸ்து பெற்ற இந்த முன்னணி நிறுவனத்தில் தற்போது ‘கேட்’ தேர்வின் அடிப்படையில் என்ஜினீயர் டிரெயினி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

உத்தேசமாக 50 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மெக்கானிக்கல் பிரிவுக்கு 30 இடங்களும், எலக்ட்ரிக்கல் பிரிவுக்கு 20 இடங்களும் உள்ளன. இவை தொடர்பான என்ஜினீயரிங், தொழில்நுட்ப படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக, அதாவது 1–9–1989 தேதிக்கு பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும். முதுநிலை படிப்பு படித்திருந்தால் 29 வயதுடையவராக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம். 

இதற்கான விண்ணப்பம் 9–1–2017 அன்று செயல்பாட்டிற்கு வரும். 3–2–2017 தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இது பற்றிய விவரங்களை    http://careers.bhel.in/   என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

எச்.ஏ.எல். 

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் எனப்படும் விமான நிறுவனம், மத்திய அரசின் நவரத்னா அந்தஸ்து பெற்ற பொதுத்துறை நிறுவனமாகும். விமானம், ஹெலிகாப்டர் மற்றும் விமான என்ஜின்கள், கப்பல் டர்பைன்கள் மற்றும் துணைப் பொருட்கள் வடிவமைப்பு, தயாரிப்பு, பழுதுபார்த்தல் என பல்வேறு பணிகளை இந்த நிறுவனம் கவனிக்கிறது. தற்போது பட்டதாரி என்ஜினீயர்களை ‘மேனேஜ்மென்ட் டிரெயினி’ பணியிடங்களில் நியமிக்க அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

டெக்னிக்கல் பிரிவில் 50 பணியிடங்களும், சிவில் பிரிவில் 25 இடங்களும், டிசைன் டிரெயினி பணிக்கு 50 இடங்களும் உள்ளன. மொத்தம் 125 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மெக்கானிக்கல், புரொடக்சன், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேசன், சிவில், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேசன் உள்ளிட்ட பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. 

7–2–2017 தேதியில் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பம் 6–1–2017 முதல் 7–2–2017 வரை   www.halindia.com என்ற இணையதளத்தில் செயல்பாட்டிற்கு வரும்.

பி.பி.என்.எல். 

பாரத் பிராட்பேண்ட் நெட்வொர்க் லிமிடெட் (பி.பி.என்.எல்.) எனப்படும் தகவல்தொடர்பு நிறுவனத்திலும் ‘கேட்’ தேர்வின் அடிப்படையில் எக்சிகியூட்டிவ் டிரெயினி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் போன்ற பிரிவில் பி.இ., பிடெக் படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. விண்ணப்பதாரர் 15–1–2017 தேதியில் 21 முதல் 27 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பம்   www.bbnl.nic.in   என்ற இணையதளத்தில் 15–1–2017 முதல் செயல்பாட்டிற்கு வரும். 27–2–2017–ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விரிவான விவரங்களை அந்த இணையதளத்தில் பார்க்கலாம்.

பி.இ.எம்.எல்.

மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று பி.இ.எம்.எல்.. பாதுகாப்பு, சுரங்கம், கட்டுமானம், ரெயில்– மெட்ரோ, விண்வெளி போன்ற பல்வேறு துறைகளுக்கான என்ஜினீயரிங் சேவையை நிறைவேற்றும் பல்துறை வணிக நிறுவனம் இது. தற்போது மேனேஜ்மென்ட் டிரெயினி பணியிடங்களை ‘கேட்’ தேர்வின் அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

விண்ணப்பதாரர்கள் 21–1–2017 தேதியில் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பணியிடங்களுக்கான விண்ணப்பம் 10–1–2017 முதல் 31–1–2017 வரை இணையதளத்தில் செயல்பாட்டில் இருக்கும். இது பற்றிய விவரங்களை   www.bemlindia.com  என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.

அணுசக்தி கழகம்

அணுசக்தி மின் நிறுவனங்களில் ஒன்றான என்.பி.சி.ஐ.எல். நிறுவனத்தில் கேட் தேர்வின் அடிப்படையில் எக்சிகியூட்டிவ் டிரெயினி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. கெமிக்கல், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், டெலி கம்யூனிகேசன், இன்ஸ்ட்ருமென்டேசன் உள்ளிட்ட பிரிவுகளில் என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பம் ஜனவரி 2 வாரத்தில் திறக்கும். பிப்ரவரி 2–வது வாரத்திற்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை www.npcilcareers.co.in   என்ற இணையதளத்தில் பார்க்கலாம். 

கப்பல் தளம்

மும்பையில் செயல்படும் மசாகான் டாக் ஷிப் பில்டர் நிறுவனத்தில் எக்சிகியூட்டிவ் டிரெயினி டெக்னிக்கல் பணிக்கு 8 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்கு 6–2–2017 தேதியில் 28 வயதுக்கு உட்பட்ட என்ஜினீயர்கள் விண்ணப்பிக்கலாம். இதேபோல எக்சிகியூட்டிவ் டிரெயினி பணிக்கு மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல் பிரிவிலும் தேர்வு செய்யப்படுகிறார்கள். பணியிட எண்ணிக்கை வெளியாகவில்லை. இதற்கான விண்ணப்பம் 6–1–2017 முதல் 6–2–2017 வரை செயல்பாட்டில் இருக்கும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும்   www.mazagondock.gov.in  என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

மின் நிறுவனம்

மத்திய மின்தொகுப்பு நிறுவனம் (பவர் கிரிட் கார்ப்பரேசன்) ‘கேட்’ தேர்வின் அடிப்படையில் எக்சிகியூட்டிவ் டிரெயினி பணியிடங்களை நிரப்ப உள்ளது. எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், மெக்கானிக்கல் உள்ளிட்ட பிரிவுகளில் என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பம் ஜனவரி 2017–ல், திறக்கும். பிப்ரவரிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை   www.powergridindia.com   என்ற இணையதளத்தில் பார்க்கலாம். 

என்.எல்.சி.  

நெய்வேலி பழுப்புநிலக்கரி நிறுவனத்தில் (என்.எல்.சி.) கிராஜூவேட் எக்சிகியூட்டிவ் டிரெயினி பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், இன்ஸ்ட்ருமென்டேசன், கம்ப்யூட்டர் சயின்ஸ், மைனிங் போன்ற பிரிவில் காலிப்பணியிடங்கள் உள்ளன. என்ஜினீயரிங் பட்டதாரிகள் ‘கேட்’ தேர்வுக்கு விண்ணப்பித்துவிட்டு இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். 1–12–2016 முதல் 30–12–2016–ந் தேதி வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இதுபற்றிய விவரங்களை   www.nlc.india.com     இணையதளத்தில் பார்க்கலாம்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank