வேலைவாய்ப்பக பதிவு மூப்பின்படி அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம்.
புதுச்சேரி வேலைவாய்ப்பக பதிவு மூப்பின்படியும், மத்திய அரசு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தகுதி பட்டியல்படியும் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்
நியமனம் மேற்கொள்ள கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது என முதல்வர் வி.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் நாராயணசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை இரவு 2 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்றது. அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், நமச்சிவாயம், கந்தசாமி, கமலக்கண்ணன், ஷாஜஹான், தலைமைச் செயலாளர் மனோஜ் பரிதா, பல்வேறு துறை செயலாளர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவுகள் குறித்து முதல்வர் நாராயணசாமி கூறியதாவது:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி உச்சநீதிமன்றத்தில் புதுச்சேரி அரசு தொடர்ந்து வலியுருத்தும். மழைக்காலத்திற்கு முன்பாக வெள்ளத்தடுப்பு குறித்து எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டது.
இதில் ரூ.1400 கோடியை பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 20 ஆண்டுகளுக்கு கடனாக பெறுவது என்றும் மத்திய உள்துறை மூலம் பெறப்படும் மீதமுள்ள ரூ.900 கோடியை மாணியமாக பெற மத்திய அரசை வலியுறுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அரசு பள்ளிகளில் ஆசிரியர் தேர்வு செய்வதில் மத்திய அரசு ஆசிரியர்ர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற தரவரிசை பட்டியல்படியும், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு அடிப்படையிலும் தான் இனிமேல் தேர்வு செய்யப்படும் என்ற கொள்கை முடிவு அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
தீபாவளி பண்டிகைக்கு அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய போனஸ் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி உச்சநீதி மன்றத்தில் புதுச்சேரி அரசு தொடர்ந்து வலியுருத்தும் என்றார் நாராயணசாமி.