அரசு பள்ளிகளில் செல்போன் பயன்படுத்த ஆசிரியர்களுக்கு தடை
அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் செல்போன் கொண்டு செல்லவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நடப்பு கல்வியாண்டு தொடக்கத்தில் தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்றும், இதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு இருந்தது.
ஆனால் இந்த உத்தரவு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஈரோடு முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து, அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது. அந்த உத்தரவில் ஒவ்வொரு ஆசிரியரிடமும் தனித்தனியாக கையொப்பம் பெறப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் செல்போன் கொண்டு வரக்கூடாது என்றும், மீறி கொண்டு வந்தால் செல்போனை பறிமுதல் செய்து பள்ளி தலைமையாசிரியர் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்றும், இதை பின்பற்றாவிட்டால் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.