தொலைநிலை கல்வி வழங்கும் பல்கலைகள், படிப்பு மற்றும் அங்கீகார விபரத்தை, இணையதளத்தில் வெளியிட, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., உத்தரவு பிறப்பித்துள்ளது.
யு.ஜி.சி., அங்கீகாரம் பெற்று, பல்கலைகள் தொலைநிலை படிப்புகளை நடத்துகின்றன. அரசு பல்கலைகள், சம்பந்தப்பட்ட மாநிலத்தை தாண்டியும், தனியார் நிகர்நிலை பல்கலைகள், தங்கள் வளாகத்திற்கு வெளியிலும், கல்வி மையங்கள் அமைக்க கூடாது. ஆனால், பல பல்கலைகள் வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும், கல்வி மையங்களை திறந்துள்ளன.
சில பல்கலைகள், தனியார் மூலம் மையங்கள் நடத்துகின்றன; இதற்கு, யு.ஜி.சி., அனுமதி அளிக்கவில்லை. தமிழகத்தில், நடப்பு ஆண்டில், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை, தஞ்சை தமிழ் பல்கலை மற்றும் ஹிந்தி பிரசார சபாவுக்கு மட்டுமே அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், பல பல்கலைகள், தொலைநிலை கல்வியில் மாணவர் சேர்க்கையை துவக்கியுள்ளன. எனவே, மாணவர்கள் ஏமாறாமல் இருக்க, யு.ஜி.சி., கிடுக்கிப்பிடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், 'அனைத்து பல்கலைகளும், தங்களின் படிப்பு விபரங்கள் மற்றும் அதற்கான அங்கீகார கடிதத்தை, பல்கலையின் இணையதளத்தில் வெளியிட வேண்டும். அதை பார்த்து உறுதி செய்த பின், மாணவர்கள், அந்த பல்கலையில் சேரலாம்' என, தெரிவித்துள்ளது.