கூகிள் ப்ளே ஸ்டோரில் உள்ள செயலிகளில் பரவும் வைரஸ்!
கூகிளின் ப்ளே ஸ்டோரில் உள்ள 400-க்கும் மேற்பட்ட செயலிகள் 'ட்ரஸ்கோட்' என்னும் மால்வேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
'ட்ரஸ்கோட்' என்னும் மால்வேரினால் பாதிக்கப்பட்ட செயலிகளை பதிவிறக்கம் செய்யும்பொழுது, அவற்றின் மூலமாக நமது அலைபேசி அல்லது மற்ற கருவிகளில் 'த்ரெட் ஆக்டர்ஸ்கள்' உட்புகுகின்றன.
இத்தகைய கருவிகள் அலுவலக வலைப்பின்னலில் இணைக்கப்படும் பொழுது, அங்கிருக்கும் உட்புற சர்வர் கணினியை தாக்கும் அல்லது முக்கியமான தகவல்களை திருடும்.
இந்த தகவலை மென்பொருள் பாதுகாப்பு சேவை நிறுவனமான 'ட்ரெண்ட் மைக்ரோ' தெரிவித்துள்ளது.
கூகிள் ப்ளே ஸ்டோரில் அதிகமாக தரவிறக்கப்படும், விளையாட்டுகள், ஸ்கின்ஸ் மற்றும் அலைபேசியை மேம்படுத்த உதவும் பல்வேறு வகையான 'தீம்'கள் ஆகியவையே இந்த மால்வேரின் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன.
செயலியின் ஒரு சிறு பகுதியாக மட்டுமே இந்த மால்வேர்கள் செயல்படுவதால் அவற்றை அடையாளம் காண்பது அத்தனை எளிதானதாக இல்லை.
தற்போது பெரும்பாலான அலுவலகங்கள், தங்கள் ஊழியர்களின் அலைபேசி மற்றும் டேப்லெட் உள்ளிட்ட கருவிகளை அலுவலக கணினி வலைப்பிபின்னலில் இணைத்து
பயன்படுத்த அனுமதி அளித்து வருவதால், இந்த மால்வேர் தாக்குதலின் பாதிப்பு அதிகமாக வாய்ப்பு உள்ளது.
இது பற்றி 'ட்ரெண்ட் மைக்ரோ' நிறுவனம் கூகிளுக்கு தெரியப்படுத்தி விட்டதால், கூகிள் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.