சென்னை புறநகரில் புதிய வகை வைரஸ் பாதிப்பு?-DINAMANI


          சென்னை புறநகர் பகுதிகளில் கொசுக்களின் மூலம் புதிய வகை வைரஸ் பரவியுள்ளதாகவும், இது மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


             திருவள்ளூர் மாவட்டத்தில் செப்டம்பரில் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு 10-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதையடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

இந்த நிலையில் பொழிச்சலூரைச் சேர்ந்த பாத்திமா (8), முகமது (4), மதுரவாயலைச் சேர்ந்த லட்சிதா (11), எண்ணூரைச் சேர்ந்த தர்ஷினி (7) ஆகிய 4 குழந்தைகள் அக்டோபர் 15-இல் காய்ச்சல் பாதிப்புக்கு உயிரிழந்தனர். இதையடுத்து, சென்னை புறநகர் பகுதிகளில் நோயைக் கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

20 மருத்துவக் குழுக்கள்: இதன்படி, பொழிச்சலூர், மதுரவாயல், தாம்பரம், அனகாபுத்தூர், திருவேற்காடு, அய்யப்பன்தாங்கல், பம்மல் உள்ளிட்ட பகுதிகளில் நியமிக்கப்பட்டுள்ள 20 மருத்துவக் குழுவினர் காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை அளிப்பர். மேலும், உயர் சிகிச்சை தேவைப்படுவோரை மருத்துவமனைக்குப் பரிந்துரைப்பார்கள்.

இதுதவிர, கொசுக்களை ஒழிப்பதற்கு கொசு மருந்து அடிக்கும் பணிகளும், சுற்றுப்புறங்களை தூய்மைப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
வடசென்னையில் 5 குழுக்கள்: இதேபோன்று, எண்ணூர், மணலி உள்ளிட்ட வட சென்னை பகுதிகளில் மாநகராட்சி சார்பில் 5 மருத்துவக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

மேலும் காய்ச்சல் பாதிப்பைத் தடுக்கும் முயற்சியாக நிலவேம்பு குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். புதிய வைரஸ்: மாதவரம், மணலி, எண்ணூர், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு புதிய வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக வடசென்னையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கூறியது:-
வட சென்னையில் கொசுக்களால் பரவும் ஒரு புதிய வகை வைரஸ் பரவி வருகிறது. பொதுவாக கொசுக்களால் ஏற்படும் காய்ச்சல், டெங்கு போன்ற பாதிப்புகளைப் பொருத்தவரை, முதல் 5 நாள்களுக்கு காய்ச்சல் இருக்கும். பின்னர், ரத்தத்தில் தட்டணுக்கள் குறையும். அதற்கடுத்து உடலின் உள்புற உறுப்புகளில் ரத்தக்கசிவு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும். இதனால் பாதிப்பு ஏற்பட்ட உடனேயே சிகிச்சை அளிக்கத் தொடங்கினால் உயிரைக் காப்பாற்ற முடியும்.

புதிய வைரஸானது 2,3 நாள்கள் காய்ச்சலுக்குப் பின்பு உடனே மூளையைப் பாதிக்கின்றன. இதனால், சாதாரண காய்ச்சல் என்று நினைக்கும் முன்பே உயிரிழப்பு ஏற்பட்டுவிடுகிறது.

சென்னை மாநகரில் பெருமளவில் பாதிப்பு இல்லை என்றாலும், அண்ணா நகர், அயனாவரம் போன்ற பகுதிகளில் சிலருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

அரசு ஆலோசனை: இந்த நிலையில், அரசு- தனியார் மருத்துவமனைகளின் மருத்துவர்கள், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாகவும், காய்ச்சல் பாதிப்புகளை தடுக்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அரசுத் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

சுய மருத்துவம் கூடாது! இந்த நிலையில், குழந்தைகள், முதியோர், கர்ப்பிணிகள், முதியோர், சர்க்கரை நோயாளிகள் உள்ளிட்ட அனைவரும் மருத்துவமனையை அணுக வேண்டும் என்றும் மருந்துக் கடைகளில் சுயமாக மருந்துகளை வாங்கி சாப்பிடக் கூடாது என்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கேட்டுகொண்டுள்ளனர்.
மருந்துவர் பரிந்துரையின்றி மருந்துக
ள் வழங்கும் மருந்துக் கடைகள் மீது மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்ககம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீண்டும் ஆலோசனை: தனியார் மருத்துவமனைகளுக்கு வரும் காய்ச்சல் நோயாளிகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து திங்கள்கிழமை ஆலோசனை நடத்தப்படுவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பீதியடைய வேண்டாம்!
புதிய வகை வைரஸ் பாதிப்பு எதுவும் இல்லை என்றும் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி கூறினார். இது தொடர்பாக அவர் கூறியது:

தமிழகத்தைப் பொருத்தவரை டெங்கு, டைபாய்டு, மலேரியா, எலிக்காய்ச்சல் ஆகிய காய்ச்சல் வகைகள்தான் பொதுவாக பாதிப்பை ஏற்படுத்தும்.
டெங்கு காய்ச்சலைப் பொருத்தவரை உலக அளவில் 4 வகையாக மக்களைத் தாக்கும். சிலருக்கு சாதாரண காய்ச்சலைப் போன்று வந்து சென்றுவிடும்.
சிலவகை தட்டணுக்களைக் குறைக்கும், சில வகை 2 நாள்கள் சிகிச்சைக்குப் பின்பு குறையும். வேறு சில வகையோ உட்புற உறுப்புகளில் ரத்தக்கசிவை ஏற்படுத்தி மூளையைப் பாதிக்கும். இது ஒவ்வொருவரின் உடலின் தன்மையைப் பொருத்தது. எனவே, சென்னையில் புதிய வகை வைரஸ் பாதிப்பு எதுவும் இல்லை. மக்கள்
பீதியடைய வேண்டாம் என்றார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022