RMSA திட்ட செலவு அனைத்தும் "ஆன்லைன்' மயம் : மத்திய அரசு முடிவு


           தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில், (ஆர்.எம்.எஸ்.ஏ.,) அனைத்து செலவினங்களைம் ஆன்லைன் கணக்கில் மேற்கொள்ளும் வகையில் மத்திய அரசு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. 


            தமிழகத்தில் எஸ்.எஸ்.ஏ.,வை தொடர்ந்து, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளில் மாணவர்கள் படிப்பை இடையில் நிறுத்துவதை தவிர்க்கும் வகையில், ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டம் 2009 முதல் அமலில் உள்ளது. இதன் மூலம் தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், நுாலகம், கணினி அறை, கழிப்பறை, குடிநீர் வசதி, பள்ளி மானியம் மற்றும் பணியிடை பயிற்சிகள் உட்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகள் சார்பில் 60:40 என்ற விகிதத்தில் நிதிஒதுக்கீடு செய்கின்றன.
தமிழகத்தில் ஆண்டிற்கு 2 ஆயிரம் கோடிக்கு மேல், இத்திட்டம் மூலம் நிதி ஒதுக்கப்படுகிறது. இதற்காக, ஒப்பந்ததாரர் உள்ளிட்டோருக்கு முடிந்த பணிகள் தொடர்பாக சமர்ப்பிக்கப்படும் ரசீதுகள் அடிப்படையில் பணப்பட்டுவாடா செய்யப்படுகிறது. இதில் பல்வேறு முறைகேடுகள் எழுவதாக புகார்கள் எழுந்தன. 
மேலும் திட்ட நடைமுறைகளை எளிமைப்படுத்தவும், அனைத்து பண பரிவர்த்தனைகளையும், ஆன்லைன் கணக்கு எண்களில் மட்டும் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. இதனால் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் பொது நிதிமேலாண்மை திட்டம் (பி.எப்.எம்.எஸ்.,) மூலம் கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 
இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், பள்ளிகளுக்கு வெள்ளை அடித்தால் கூட ஆன்லைன் கணக்கு மூலம் தான் ஊழியருக்கு சம்பளம் வழங்கும் நிலை ஏற்படும்.இதனால் செய்யாத திட்டப் பணிகளுக்காக போலி 'பில்'கள் மூலம் பணம் பெறுவது போன்ற முறைகேடுகள் முற்றிலும் ஒழிக்கப்படும் என கல்வியாளர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து டில்லி பி.எப்.எம்.எஸ்., சீனியர் அக்கவுண்ட் ஆபீசர் பிரான்சிஸ் கூறியதாவது:பி.எப்.எம்.எஸ்., முறை 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் அமலில் உள்ளது. இத்திட்டத்திற்கு ஒதுக்கப்படும் பணம் தொடர்பான அனைத்து நடைமுறைகளும் ஆன்லைன் கணக்கு மூலம் நடக்கும். இதற்காக தமிழகத்திலும் சிறப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 
ஆர்.எம்.எஸ்.ஏ., மட்டுமல்லாமல் ஐ.டபுள்யூ.எம்.பி., நேஷனல் ஹெல்த் அச்சிவ்மென்ட் திட்டம் உட்பட மேலும் பல திட்டங்களிலும் இம்முறை அமல்படுத்தப்படவுள்ளது. இதற்காகவும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் திட்டச் செலவினங்களில் வெளிப்படை தன்மை ஏற்படும். வரும் காலத்தில் அனைத்து அரசு திட்டங்களின் செலவினங்களின் விவரம் இம்முறையில் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது, என்றார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)