TET ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு: காலி இடங்கள் பட்டியலை இன்று தாக்கல் செய்ய உத்தரவு
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு முறை அடிப்படையில் நிரப்பப்பட்ட இடங்களுக்குப் பிறகு காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்கள் பட்டியலை புதன்கிழமை (இன்று) தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்த
ரவிட்டது.
இது தொடர்பாக ஆசிரியர் பணியிடங்களுக்குத் தேர்வாகாத விண்ணப்பதாரர்களில் ஒரு பிரிவினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சிவ கீர்த்தி சிங், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது.
அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர்கள் வி.கிருஷ்ணமூர்த்தி, நளினி சிதம்பரம், அஜ்மல் கான் ஆகியோர் ஆஜராகி, "தமிழகத்தில் 2012-இல் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்புப் பணிகள் 2013-இல் நடந்தது. அதன் பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதிகாண் (வெயிட்டேஜ்) மதிப்பெண் வழங்கப்படுவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட இரு அரசாணைகள் நியமன விதிகளுக்கு எதிரானது' என்று வாதிட்டனர்.
ஆனால், தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.பி.ராவ், "அனைத்து சட்ட நடைமுறைகளின்படியே தமிழக அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன' என்றார். இதைக் கேட்ட நீதிபதிகள் கூறியது: தமிழக அரசு வெளியிட்ட இரு அரசாணைகளால் மனுதாரர்களுக்கு ஆசிரியர் பணியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என பலர் முறையிட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். எனவே, தற்போதைய சூழலில், தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு முறை அடிப்படையில் நிரப்பப்பட்ட இடங்களுக்குப் பிறகு காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்கள் பட்டியலை தமிழக அரசும் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை மனுதாரர்கள் தரப்பும் நீதிமன்றத்தில் புதன்கிழமை (அக்டோபர் 5) தாக்கல் செய்ய வேண்டும். இந்த விவகாரம் குறித்து புதன்கிழமை விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.