தமிழ்நாட்டில் 3975 குறுவளமையங்களில் அறிவியல் கண்காட்சி நடத்த உத்தரவு


           ராஷ்டிரிய அவிஸ்கார் அபியான் திட்டம் சார்பில், தமிழ்நாட்டில் உள்ள 3975 குறுவளமையங்களில் அறிவியல் கண்காட்சி நடத்த அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி உத்தரவிட்டுள்ளார். இதற்காக
ஒவ்வொரு குறுவளமையத்திற்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.397.50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.


இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் எஸ்.மாடசாமி  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ராஷ்டிரிய அவிஸ்கார் அபியான் (RAA) திட்டமானது மாணவர்கள் அறிவியல் மற்றும் கணித கற்றலை மகிழ்ச்சியான கற்றலாக அமைப்பதற்கும், புதுமை செய்வதில் கவனம் செலுத்தவும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் திட்டத்தின் நோக்கத்தினை மாணவர்கள் பெறும் வகையில், அறிவியல் கண்காட்சிகள் குறுவளமைய அளவில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டு இந்த கண்காட்சிக்கான தலைப்பு தேசிய வளர்ச்சியில் அறிவில், தொழில்நுட்பம் மற்றும் கணிதத்தின் பங்கு (Science, Technology and Mathematics for Nation Building) ஆகும்.

இத் தலைப்பில் உடல்நலம், தொழிற்துறை, போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு, நிலையான சுற்றுச் சூழலுக்கான புதுப்பிக்கத்தக்க வளங்களை கண்டுபிடித்தல், உணவு உற்பத்தி மற்றும் உணவு பாதுகாப்பில் புதுமைகள், அன்றாட வாழ்வில் கணிதம் அடிப்படையிலான தீர்வுகள் ஆகியவை உட்கருத்துப் பொருட்களை உள்ளடக்கிய அறிவியல் கண்காட்சிக்கான மாதிரிகள் (Models) மற்றும் திட்டங்களை (Projects) மாணவர்கள் தயார் செய்ய வேண்டும்.

குறுவளமையம் அமைந்துள்ள பள்ளியிலே அறிவியல் கண்காட்சி நடத்தப்படும். மாநிலத்தில் 3975 குறுவளமையங்களில் நடைபெறும் இக் கண்காட்சிக்கு பள்ளிக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.397.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 134 குறுவளமையங்களில் நவம்பர் 25-ம் தேதிக்குள் இந்த அறிவியல் கண்காட்சி நடத்தி முடிக்கப்படும்.

தொடக்கப் பள்ளிகள் (1 முதல் 5 வகுப்பு) 2 மாதிரிகளும், நடுநிலைப் பள்ளிகளில் (1-5 வகுப்பு 2 மாதிரிகளும் 6-8 வகுப்பு 2 மாதிரிகளும்) 4 மாதிரிகள் தயார் செய்ய வேண்டும். உயர்நிலைப் பள்ளி/மேல்நிலைப் பள்ளிகளில் 6-8 வகுப்பு மாணவர்கள் இரு மாதிரிகளும் தயார் செய்ய வேண்டும்.

பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட மாதிரிகள் மற்றும் திட்டங்களின் எண்ணிக்கைத் தவிர்த்து, மாணவர்கள் தாங்களாக முன் வந்து செய்யும் மாதிரிகள் ஊக்குவிக்கப்படும். இதற்காக ஆசிரியர்கள் விலையில்லா மற்றும் விலைகுறைந்த பொருட்களைப் பயன்படுத்தி மாதிரிகள் செய்ய மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

மலரும் இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிக்கும் விதமாகவும், அவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் விதமாகவும், குறுவளமையம் அளவில் சிறந்த மூன்று மாதிரிகள் நடுவர் குழு தேர்வு செய்து முறையே ரூ.400, ரூ.300, ரூ.200 வழங்கும்.

சிறப்பாக பங்கேற்ற பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் படைப்பாற்றல், திறமை, ஈடுபாட்டினை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த பள்ளியினை நடுவர் குழு தேர்வு செய்து அவர்களின் கூட்டு முயற்சிக்காக ரூ.500 மதிப்புள்ள கேடயம் பரிசாக வழங்கும்.

கண்காட்சியை கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்கள், உதவி திட்ட அலுவலர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோர் பார்வையிடுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022