7 லட்சம் மாணவர்களை தொழிலதிபர்களாக்க இலக்கு; மத்திய அரசு புதிய திட்டம்!


       மத்திய அரசு, அடுத்த ஐந்து ஆண்டுகளில், 7 லட்சம் மாணவர்களுக்கு தொழில் பயிற்சி அளித்து, தொழிலதிபர்களாக உருவாக்கும் நோக்கில், ‘பிரதான் மந்திரி யுவ
யோஜனா’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

          டில்லியில், நேற்று முன்தினம், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு துறை அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி தலைமையில், ‘தரமான ஆற்றல்’ என்ற தலைப்பில், மாநாடு நடைபெற்றது.


பெரும்பான்மை மாநில அரசு பிரதிநிதிகள் பங்கேற்ற இந்த மாநாட்டில், இளைஞர்கள், மாணவர்கள் ஆகியோருக்கான தொழில் முனைவோர் பயிற்சித் திட்டத்தை, ராஜீவ் பிரதாப் ரூடி அறிவித்தார்.

அப்போது, அவர் பேசியதாவது:

இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கும் புதிய திட்டத்தின் கீழ், அடுத்த ஐந்து ஆண்டுகளில், 7 லட்சம் மாணவர்களுக்கு, தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்படும். இதற்காக, 499.94 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

மாநில அரசுகளுடன் இணைந்து, 3,050 கல்வி மையங்களில், இந்த பயிற்சி திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக, என்.ஐ.இ.எஸ்.பி.யு.டி., மற்றும் ஐ.ஐ.இ., பயற்சி மையங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இவை, 125 நாடுகளைச் சேர்ந்த, 2,600 பேர் உட்பட, 7 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு, தொழில் முனைவோர் பயிற்சியை வெற்றிகரமாக வழங்கியுள்ளன.

இதையொட்டி, உள்நாட்டில் இளைஞர்களுக்கு, மேலும் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இத்திட்டத்தின் கீழ், 2,200 கல்லுாரிகள், பல்கலைகள், 300 பள்ளிகள், 500 இந்திய தொழிற்கல்வி மையங்கள், 50 தொழில்முனைவோர் மேம்பாட்டு மையங்கள் ஆகியவற்றின் மாணவர்களுக்கு, வலைதளம் வாயிலாக தொழில் முனைவோர் பயிற்சி வழங்கப்படும்.

அத்துடன், தொழில் விபரங்கள், தொழில் முன்னோடிகளின் ஆலோசனைகள் உட்பட, தொழில் துவங்குவதற்கான அனைத்து உதவிகளையும், இளைஞர்கள் பெறலாம். தேசிய மற்றும் சர்வதேச தரத்திலான தொழில் முனைவோர் கல்விப் பயிற்சி, இளைஞர்களுக்கு வழங்கப்படும்.

அமைச்சகம், 2020க்குள், ஒரு கோடி பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக, பிரதமர் திறன் மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து, 3,000 கோடி ரூபாய், மாநில அரசுகளுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

இதன்படி, மாநிலங்களில் அமைக்கப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்கள், ஆய்வுக்கூடங்கள் மற்றும் பயிற்சி சாதனங்களின் தரம் உள்ளிட்டவை தொடர்பான வழி­காட்டு நெறிமுறைகள், தற்போது வெளியிடப்பட்டு உள்ளன. மத்திய அரசின் திட்டங்கள், அதகளவில், முதல் தலைமுறை தொழில் முனைவோரை உருவாக்க உதவும். இவ்வாறு அவர் கூறினார்.

முதல் தலைமுறையினர்:

சிறப்பாக செயல்படும், 30 வயதிற்கு உட்பட்ட, முதல் தலைமுறை தொழில் முனைவோர்களுக்கு, 2017 ஜன., 16ல், மத்திய அரசின் தொழில்முனைவோர் விரு­துகள் வழங்கப்படும் என, மத்திய திறன் மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)