டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கான திருத்திய வரையறை வெளியீடு: அருள்மொழி


            தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தப்படும் தேர்வுகளில் பங்கேற்பவர்களுக்கான வரையறைகளில்
திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, திங்கள்கிழமை முதல் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட உள்ளது என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் அருள்மொழி கூறினார்.

இந்த திருத்திய வரையறைகள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழக அரசுத் துறைகளில் இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் ஆகிய 5,451 காலிப் பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வை டி.என்.பி.எஸ்.சி. ஞாயிற்றுக்கிழமை நடத்தியது. தமிழகம் முழுவதும் 5,296 மைங்களில் நடத்தப்பட்டத் இந்தத் தேர்வில் 15 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்று தேர்வெழுதினர்.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள என்.கே.டி. மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அமைந்திருந்த தேர்வு மையத்தை அருள்மொழி ஆய்வு செய்தார். அப்போது அவர் அளித்த பேட்டி:

தமிழகம் முழுவதும் 5,296 மையங்களில் நடத்தப்பட்ட இந்த குரூப்-4 தேர்வை எழுத, முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு 15 லட்சத்து 64 ஆயிரத்து 471 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இவர்களில் 2,291 பேர் மாற்றுத்திறனாளிகள். இதில் 80 சதவீதம் பேர் தேர்வில் பங்கேற்றுள்ளனர்.

முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், 5,296 தலைமை கண்காணிப்பாளர்கள் தலைமையில் 78,216 கண்காணிப்பாளர்கள், 566 பறக்கும்படை ஆகியோர் மேற்பார்வையில் தேர்வு நடத்தப்பட்டது.

இந்த வாரத்தில் டி.இ.ஒ. தேர்வு முடிவு:

டி.என்.பி.எஸ்.சி. சார்பில் கடந்த 12 மாதங்களில் மட்டும் 15 எழுத்துத் தேர்வுகளும், 13 நேர்முகத் தேர்வுகளும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

2009, 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் அறிவிக்கை செய்யப்பட்டு, பல்வேறு காரணங்களால் தாமதமாகி வந்த உடற்கல்வி இயக்குநர், மோட்டார் வாகன ஆய்வாளர், நூலகர் ஆகிய மூன்று போட்டித் தேர்வுகளுக்கான முடிவுகள் இந்த 12 மாதங்களில் வெளியிடப்பட்டிருக்கின்றன.

2014 இல் அறிவிக்கை செய்யப்பட்ட 11 காலிப் பணியிடங்களுக்கான மாவட்ட கல்வி அலுவலர் பணியிடத்துக்கானத் தேர்வு முடிவு மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த வாரத்துக்குள் இந்த முடிவும் அறிவிக்கப்பட்டுவிடும்.

மேலும்,  2016 ஜூன் மாதம் வரை நடந்து முடிந்த மாவட்ட கல்வி அலுவலர் பதிவிக்கான தேர்வைத் தவிர, மற்ற அனைத்துத் தேர்வுகளுக்கான முடிவுகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன. இன்னும் 10 தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இவை அனைத்தும் 2016 ஜூன் மாதத்துக்குப் பிறகு நடத்தப்பட்டவையாகும்.

இந்த 10 தேர்வுகளுக்கான முடிவுகளை விரைவில் வெளியிடுவதற்கான பணிகளும், தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே, உயர்நீதிமன்ற பணியாளர்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்டு, முடிவுகளும் வெளியிடப்பட்டுவிட்டன. வரும் 14, 15 தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, நேர்முகத் தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன.

திருத்திய வரையறை: 

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு சில வரையறைகள் வகுக்கப்பட்டு பின்பற்றப்பட்டு வருகின்றன. இதில் இப்போது திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்தத் திருத்திய வரையறை டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் திங்கள்கிழமை (நவ.7) பதிவேற்றம் செய்யப்படும். இவற்றைத் தேர்வர்கள் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
தேர்வாணையத்தால் திங்கள்கிழமை முதல் அறிவிக்கப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும், இந்த திருத்திய வரையறையே பின்பற்றப்படும்.

குரூப்-1 தேர்வு அறிவிக்கை:

துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணிகளில் 81 காலி இடங்களுக்காக 2016 ஆம் ஆண்டுக்கான குரூப்-1 தேர்வு நடத்தப்பட உள்ளது. 
இதற்கான அறிவிக்கை நவம்பர் 9 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது என்றார் அவர்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022