மின் வாரியம் பெயரில் போலி 'ஆப்' !!
வீடுகளில் மின் பயன்பாடு கணக்கு எடுத்த, 20 தினங்களுக்குள், மின் கட்டணம் செலுத்த வேண்டும். இல்லையெனில், மின் வாரிய ஊழியர்கள், மின் இணைப்பை துண்டிப்பர். கட்டண மையம், இ - சேவை மையம், தபால் நிலையம், வங்கிகள் மற்றும்
மின் வாரிய இணையதளத்தில், மின் கட்டணம் செலுத்தலாம்.
மத்திய அரசு, 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தில், அரசின் அனைத்து சேவைகளையும், கம்ப்யூட்டர்மயமாக்கி வருகிறது.

இதன்மூலம், மக்கள், இணையதளம் வாயிலாக, அரசு சேவைகளை எளிய முறையில், உடனுக்குடன் பெற்று வருகின்றனர். மின் வினியோக பிரச்னைக்கு தீர்வு காண, 'மொபைல் ஆப்' எனப்படும் மொபைல் போன் செயலியை உருவாக்குமாறு, மத்தியமின் துறை அறிவுறுத்தியது. இதுவரை, தமிழ்நாடு மின் வாரியம், மொபைல் ஆப் சேவையை துவக்கவில்லை. ஆனால், மின் வாரியம் பெயரில், மின் கட்டணம் செலுத்த போலி, 'மொபைல் ஆப்' வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதில், பணம் செலுத்தி, பலரும் ஏமாறுவதாக தெரிகிறது. அப்படி இருந்தும், மின் வாரியம் அலட்சியமாக உள்ளது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: போலிகளை நம்பி, ஏமாற வேண்டாம் என, நுகர்வோர்கள் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்; போலிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது, மின் வாரியம் சார்பில், மொபைல் ஆப் உருவாக்கும் பணி நடந்து வருகிறது. அது செயல்பாட்டுக்கு வரும்போது, அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.