கழிப்பறை பராமரிப்பிற்கு தனியார் ஒப்பந்த ஊழியர்கள் அரசு பள்ளிகளில் ஒரு மாதத்திற்குள் நியமிக்க உத்தரவு
தமிழகம் முழுவதும் உள்ள அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி பள்ளிகளில், கழிப்பறையை சுத்தப்படுத்த, தனியார் ஒப்பந்தம் மூலம் ஒரு மாதத்திற்குள் பணியாளர்களை நியமிக்க த
மிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு போதிய கழிப்பறை வசதி செய்து தரவும், கழிப்பறைகளை சுத்தமாக பராமரிக்கவும், மதுரை ஐகோர்ட் கிளை, தமிழக அரசுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளது.
இதன் எதிரொலியாக, நகராட்சி நிர்வாகத் துறை செயலர் பனீந்திர ரெட்டி, அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி கமிஷனர்களுக்கு பிறப்பித்துள்ள உத்தரவு:
● அரசு பள்ளிகளில் கழிப்பறைகளை பராமரிக்க, 160.77 கோடி ரூபாய் செலவிலான திட்டத்தை, 2014 ஜூலையில், சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார். இதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு, நகராட்சி மற்றும் மாநகராட்சி பள்ளிகளில், கழிப்பறைகளை சுத்தப்படுத்த, தனியாக ஒப்பந்த ஊழியர்களை பணியமர்த்த வேண்டும்
● மாநகராட்சி, நகராட்சிகளில் இந்த ஊழியர்களுக்கு சொத்து வரி வசூலில், கல்வி நிதிக்கு ஒதுக்கப்படும் தொகை மூலம் சம்பளம் வழங்கப்பட வேண்டும். ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு, திடக்கழிவு மேலாண்மை நிதியில் இருந்து சம்பளம் வழங்க வேண்டும்
● அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை பராமரிக்கும் பொறுப்பை அந்தந்த உள்ளாட்சிகள் ஏற்க வேண்டும். இந்த பணிக்கு உள்ளாட்சிகள் தான் ஆட்களை நியமிக்க வேண்டும். பராமரிப்பு பணிகள் முறையாக நடக்கிறதா என, உள்ளாட்சி அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்ய வேண்டும்
● பள்ளி நிர்வாகங்களுடன் பேசி, காலையில் பள்ளி துவங்குவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன், ஊழியர்கள் சென்று கழிப்பறைகளை சுத்தப்படுத்தவும், பள்ளி முடியும் நேரம் வரை அவர்கள் பணியில் இருக்கவும், மதிய உணவு இடைவேளைக்கு பிறகும் கழிப்பறையை சுத்தம் செய்யவும் அறிவுறுத்த வேண்டும்
● வகுப்பறை பராமரிப்பு, பள்ளி வளாகம் பராமரிப்பு பணிகளுக்கும் இந்த ஊழியர்களை பயன்படுத்த வேண்டும்
● அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், தினக்கூலி பணியாளர்களுக்கு நிர்ணயிக்கும் சம்பளத்தையே, இந்த ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும்
● அரசு ஒப்பந்த விதிகளின் படி இந்த பணிக்கு ஆட்களை நியமிக்கும் நிறுவனங்களை தேர்வு செய்ய வேண்டும். ஒப்பந்த விதிகளுக்கு உட்பட்டு இருந்தால், மகளிர் சுய உதவிக்குழு, சமுதாய அமைப்புகளையும் இந்த ஒப்பந்தத்தில் பங்கேற்க அனுமதிக்கலாம்
● பள்ளி தலைமை ஆசிரியர்கள், பராமரிப்பு பணி குறித்து பதிவேடு பராமரிக்க வேண்டும். பள்ளி நிர்வாகத்திற்கு திருப்தியில்லாத பராமரிப்பு பணி ஒப்பந்ததாரரை, உடனடியாக நீக்க வேண்டும்
● பெண்கள் பள்ளியில் கட்டாயம் இரண்டு பெண் துப்புரவு பணியாளர்களும், ஆண்கள் பள்ளியில் இரண்டு ஆண் அல்லது பெண் துப்புரவு பணியாளர்களும், இருபாலரும் படிக்கும் பள்ளியில் ஒரு பெண், ஒரு ஆண் துப்புரவு பணியாளர்களும் பணியமர்த்தப்பட வேண்டும்
● பெண்கள் பள்ளியில், 'நாப்கின்'களை பாதுகாப்பாக அகற்றுவது இந்த பராமரிப்பு பணி நிறுவனத்தின் வேலையாகும்
● அனைத்து அரசு பள்ளிகளிலும் கழிப்பறை பராமரிப்பு பணிக்கு நியமிக்கப்பட்ட ஊழியர் விபரங்களை, ஒரு மாதத்திற்குள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அதிகாரிகள், அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.