அனைத்துச் சான்றிதழ்களிலும் கல்வி முறையை குறிப்பிட வேண்டும்: யுஜிசி புதிய வழிகாட்டுதல்.
பல்கலைக்கழகங்கள் சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து விதமானச் சான்றிதழ்களிலும், அவர் எந்த முறையில் பட்டப்படிப்பை மேற்கொள்கிறார் என்பதைக் குறிப்பிட வேண்டும் என புதிய வழிகாட்டுதலை பல்கலைக்கழக மானியக்
குழு (யுஜிசி) வெளியிட்டுள்ளது.
அதாவது, திறந்தநிலைப் பல்கலைக்கழகம் அல்லது தொலைநிலைக் கல்வி முறையில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்துச் சான்றிதழ்களிலும் திறந்தநிலைக் கல்வி முறை அல்லது தொலைநிலைக் கல்வி முறை என்பதைக் குறிப்பிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. பொதுவாக மதிப்பெண் சான்றிதழ்கள், தாற்காலிக பட்டச் சான்றிதழ் (புரொவிஷனல்) ஆகியவற்றில் மட்டுமே தொலைநிலைக் கல்வி முறை அல்லது திறந்தநிலைக் கல்வி முறை எனக் குறிப்பிடுவதை பல்கலைக்கழகங்கள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. பட்ட (டிகிரி) சான்றிதழில் இதுபோல குறிப்பிடுவதில்லை. கல்லூரிகளில் நேரடியாகச் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும்
பட்டச் சான்றிதழ் போலவே தொலைநிலைக் கல்வி முறையில் படிக்கும் மாணவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்களும் இதே நடைமுறையைத்தான் பின்பற்றி வருகின்றன. இந்த நிலையில், யுஜிசி வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதலில், பல்கலைக்கழகங்கள் சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து விதமான சான்றிதழ்களிலும் அவர் எந்த முறையில் பயின்றார் என்பதைக் குறிப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய வழிகாட்டுதல் காரணமாக, இனி பட்டச் சான்றிதழிலும் தொலைநிலைக் கல்வி முறை அல்லது திறந்தநிலைக் கல்வி முறை எனக் குறிப்பிடப்படும்.