அரசு ‘லேப் டெக்னீசியன்’ – விண்ணப்ப விநியோகம்!
மருத்துவத்துறையில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். போன்ற படிப்புகள் மட்டுமல்லாமல், 23 பட்ட மருத்துவ படிப்புகளும், 29 டிப்ளமோ படிப்புகளும் உள்ளன.
இதனை தேர்ந்தெடுத்து படிப்பதன் மூலம் இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் சிறந்த வேலை வாய்ப்பினை பெறலாம். இந்நிலையில், மருத்துவம் சார்ந்த பல்வேறு டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளைப் படிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
டிப்ளமோ மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பப் படிவங்கள், அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும், சென்னை, கிண்டி, கிங் நோய்த்தடுப்பு நிலையத்திலும் கிடைக்கும். விண்ணப்ப விநியோகம் நாளை முதல் டிசம்பர் 2ஆம் தேதி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, உரிய ஆவண நகலுடன், ‘செயலர், தேர்வுக்குழு, மருத்துவக் கல்வி இயக்ககம், கீழ்ப்பாக்கம், சென்னை – 10’ என்ற முகவரிக்கு, டிசம்பர் 3ஆம் தேதிக்குள் வந்து சேரும்படி அனுப்ப வேண்டும்.
கார்டியோ சோனாகிராபி டெக்னீசியன், இசிஜி - டிரெட்மில் டெக்னீசியன், பம்ப் டெக்னீசியன், கார்டியாக் கேத்தரைட்டேஷன் லேப்டெக்னீசியன், எமர்ஜன்சி கேர் டெக்னீசியன், ரெஸ்பிரேட்டரி தெரபி டெக்னீசியன், டயாலிசிஸ் டெக்னீசியன், அனஸ்தீசியா டெக்னீசியன், தியேட்டர் டெக்னீசியன், ஆர்த்தோபீடிக் டெக்னீசியன், ஆடியோமெட்ரி, ஹியரிங் லாங்க்வேஜ் அண்ட் ஸ்பீச், கிளினிக்கல், தெரப்டிக், நியூட்ரிஷன் அண்ட் ஃபுட் சர்வீஸ் மேனேஜ்மெண்ட், மல்டி பர்ப்பஸ் ஹாஸ்பிடல் ஒர்க்கர் கோர்ஸ், இஇஜி - இஎம்ஜி கோர்ஸ் ஆகியவற்றில் ஓராண்டு சான்றிதழ் படிப்புகளில் சேர விரும்புவோர் பிளஸ்-2 தேர்வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடப்பிரிவுகளை எடுத்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்த மாணவர்களும் இந்தச் சான்றிதழ் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.
சராசரியாக 45% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், அருந்ததியர், பழங்குடியினர் 40% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தின் விலை ரூபாய் 300. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. மேலும், விவரங்களை www.tnhealth.org என்ற இணையதளத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்..