அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வங்கி கணக்கில் செலுத்தப்படும் தமிழக அரசு முடிவு
அரசு ஊழியர்களுக்கான மாத சம்பள தொகையையும், ஓய்வூதியதாரர்களுக்கு பென்சன் தொகையையும் வழக்கம் போல வங்கி கணக்கில் செலுத்த தமிழக அரசு முடிவு செய்து
ள்ளது.
பண கட்டுப்பாடு
தமிழகத்தில் 14 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். 1 லட்சம் தொகுப்பூதியதாரர்களும், 7 லட்சம் ஓய்வூதியதாரர்களும் உள்ளனர். இவர்களுடைய வங்கி கணக்கில் மாதந்தோறும் 30-ந்தேதி பணம் செலுத்தப்பட்டு வருகிறது.
அதேபோன்று இந்த மாதமும் வங்கி கணக்கில் பணம் செலுத்துவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அன்றைய தினமே அவர்கள் பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.
இதுகுறித்து என்.ஜி.ஓ. சங்க தலைவர் சண்முகராஜாவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-
வங்கி கணக்கு மூலம் அரசு ஊழியர்களுக்கு சம்பள தொகையும், ஓய்வூதியதாரர்களுக்கு பென்சன் தொகையும் வழக்கம் போல் வங்கி கணக்கு மூலம் 30-ந்தேதி வழங்கப்பட உள்ளது.
வங்கிகளில் ஒரு வாரத்துக்கு 24 ஆயிரம் ரூபாய் மட்டுமே பணம் எடுக்க முடியும் என்று கட்டுப்பாடு உள்ளது. இதனை தளர்த்தினால் மட்டுமே ஒட்டுமொத்த தொகையையும் எடுக்க முடியும்.
ரிசர்வ் வங்கிக்கு கோரிக்கை
அரசு ஊழியர்கள் மாத தொடக்கத்தில் வீட்டு வாடகை, மளிகை செலவு, பால் செலவு போன்ற குடும்ப செலவுகளை மேற்கொள்ள வேண்டி உள்ளது. எனவே அரசு ஊழியர்களுக்கு ஒட்டுமொத்த சம்பளத் தொகையையும் ரிசர்வ் வங்கி வழங்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.