அரசு ஊழியர்களுக்கு ரொக்கமாக ஊதியம் தமிழக கோரிக்கைக்கு ரிசர்வ் வங்கி மறுப்பு


      தமிழக அரசு ஊழியர்கள்-ஓய்வூதியதாரர்களுக்கு மாத ஊதியத்தை ரொக்கமாக வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்க ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது.


        செல்லாத ரூபாய் நோட்டுப் பிரச்னை, ஏ.டி.எம்., மையங்களில் நீண்ட வரிசை போன்ற காரணங்களால் மாத ஊதியத்தை ரொக்கமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு முன்வைத்திருந்தது.

          தமிழகத்தில் 18 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களும், 7 லட்சத்துக்கும் அதிகமான ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். அவர்களுக்கு மாத ஊதியம், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் ஆகியன வங்கிக் கணக்கில் மாதந்தோறும் வரவு வைக்கப்படுகின்றன.
ஒவ்வொரு மாதத்தின் கடைசி நாளில் இந்தத் தொகை வரவு செய்யப்படுகிறது. இதற்கு முன்பாக, மாதத்தில் 18-ஆம் தேதி முதல் 20 ஆம் தேதிக்குள்ளாக கருவூலம்-கணக்குத் துறை மூலமாக சம்பளப் பட்டியல்கள் தயார் செய்யப்பட்டு ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
பெரும் பிரச்னை: ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தலைமைச் செயலகம் உள்பட தமிழகத்தில் அரசு அலுவலக வளாகங்களில் செயல்பட்டுவரும் வங்கிக் கிளைகளில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் கூட்டம் அலைமோதுகிறது. பலர் தங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுகளை மாற்றவும், வங்கிக் கணக்கில் பணத்தை எடுக்கவும் நீண்ட வரிசையில் நின்று வருகின்றனர். அவர்கள் தங்களது பணி நேரத்தில் இவ்வாறு வங்கிக் கிளைகளில் வரிசையில் நிற்பதால் பணிகள் பெருமளவு பாதிக்கப்படுகின்றன.
இதனால், அரசு வளாகங்களில் செயல்படும் ஏ.டி.எம். மையங்களில் மாலை நேரத்தில் மட்டுமே பணம் நிரப்பப்பட்டு, மாலை 6 மணிக்கு மேல் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பணம் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறை கடந்த ஒரு வார காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது.
கோரிக்கை ஏற்க மறுப்பு: தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு நவம்பர் 30-ஆம் தேதியன்று ஊதியமும், ஓய்வூதியமும் அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். அப்படி வரவு வைக்கப்படும்போது, லட்சக்கணக்கான ஊழியர்கள், வயதான ஓய்வூதியதாரர்கள் தங்களது ஊதியத்தை எடுக்க வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால், அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கும் சூழலும் உருவாகும்.
இந்த நிலையில், மாத ஊதியம், ஓய்வூதியம் ஆகியவற்றை ரொக்கமாக வழங்க தலைமைச் செயலக சங்கம் உள்பட அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தன. இந்தக் கோரிக்கை தொடர்பாக, ரிசர்வ் வங்கியுடன் நிதித் துறை அமைச்சக உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், இந்தக் கோரிக்கையை ஏற்பதற்கில்லை என ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரொக்கமாக வழங்க முடியாத நிலையில், ஊதியத்தையும், ஓய்வூதியத்தையும் வங்கிக் கணக்கில் இருந்து எடுக்க அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் படையெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)