செயல்திறன் அடிப்படையில் ஊதிய உயர்வு: விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகம்
மத்திய அரசு ஊழியர்களுக்கு வாராந்திர செயல்திறன் அறிக்கையின் அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்கும் நடைமுறை விரைவில் அமலுக்கு வரவுள்ளது.
இதற்காக, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை விரைவில் கொண்டுவர இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, மத்திய அரசு ஊழியர்கள் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை தங்களது செயல்திறன் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். அந்த அறிக்கையில், முடிக்கப்பட்ட பணிகள், நிலுவையில் உள்ள பணிகள் பற்றிய விவரங்களை அவர்கள் தெரிவிக்க வேண்டும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு "செயல்திறன் அடிப்படையில் ஊதியம்' என்ற முறையை அனைத்துப் பிரிவுகளிலும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று ஏழாவது ஊதியக் குழு கடந்த ஜூலை மாதம் பரிந்துரை செய்தது.
அதன்படி, ஊழியர்களின் பணிகள், அவர்கள் அளிக்கும் வாராந்திர செயல்திறன் அறிக்கையின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டு, அவர்களுக்கு வருடாந்திர அளவில் தர மதிப்பீடு செய்யப்படும். வாராந்திர அறிக்கை அல்லது குறிப்பிட்ட இலக்குகளை முடிக்காத ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு மறுக்கப்பட வாய்ப்புள்ளது.
அரசு ஊழியர் ஒருவர், முதல் 20 ஆண்டுகளில் சிறப்பாகப் பணியாற்றவில்லையெனில் அவரது ஊதிய உயர்வை நிறுத்தி வைக்க முடியும்.
சிறப்பாகப் பணியாற்றும் ஊழியர்களை ஊக்குவிப்பதற்காகவே இந்தத் திட்டம் கொண்டுவரப்படவுள்ளது என்று ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது