கல்வித் தரத்தை மேம்படுத்த... முயற்சி!தலைமை ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி
ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்த... முயற்சி!தலைமை ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி
அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்த, தலைமையாசிரியர்களின் திறமைகளை பட்டைத் தீட்டும் முயற்சி துவங்கியுள்ளது.
அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்தி, அதன் மூலம் மாணவர் எண்ணிக்கையை உயர்த்த, பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சியை வழங்க, பள்ளி தலைமைக்கான தேசிய மையம் திட்டமிட்டுள்ளது.
இப்பயிற்சியை வழங்கும் பொறுப்பை, அனைவருக்கும் கல்வி இயக்ககம் (எஸ்.எஸ்.ஏ.,) ஏற்றுள்ளது.நீலகிரியில் துவக்கம்...
அந்த வகையில், நீலகிரி மாவட்டத்தில், 25 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஊட்டி, குன்னுார், கோத்தகிரியில் பணிபுரியும் தலைமையாசிரியர்களுக்கு ஊட்டி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள ஜி.யு.போப் அரங்கிலும், கூடலுார் வட்டத்தில் பணிபுரியும் தலைமையாசிரியர்களுக்கு கூடலுாரிலும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. நேற்று, ஊட்டியில் துவங்கிய பயிற்சியை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி துவக்கி வைத்தார்.
ஏன் பயிற்சி?
ஒரசோலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பாலசுப்ரமணியம், கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியை செலின் ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டு, பயிற்சி வழங்கிய பின், கூறியதாவது:மாணவ, மாணவியரின் கற்பனை திறனை வளர்க்கும் வகையில் இப்பயிற்சி வழங்கப்படுகிறது. எளிதாக கிடைக்க கூடிய வளங்களை வைத்து கல்வி போதிப்பது, ஒவ்வொரு மாணவ, மாணவியரின் மனநிலை, அவர்களின் வாழ்வியல் சூழலை அறிந்து கல்வி கற்பிப்பது எப்படி? என்பது தொடர்பாக, பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
வண்ணங்களில் எண்ணம்...பயிற்சியில் பங்கேற்ற தலைமையாசிரியைகள், குழுக்களாக பிரிக்கப்பட்டு, தங்கள் பள்ளிகளில் உள்ள மாணவர்களின் நிலை, அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னை, எந்த வகையில் கல்வி போதிப்பு முறையை கொண்டு செல்வது என்பது போன்ற கருத்துக்களை, ஓவியங்கள் மூலம் தீட்டினர். வரும் நாட்களில், தலைமையாசியர்களின் தலைமைப் பண்புகளை வளர்க்க, மேலும் பல பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. பயிற்சிக்கான ஏற்பாடுகளை, எஸ்.எஸ்.ஏ., உதவி திட்ட அலுவலர் மூர்த்தி, பயிற்சி ஒருங்கிணைப்பாளர் மகேஷ் குமார் மற்றும் பலர் செய்திருந்தனர்.