அடுத்தாண்டு இறுதிக்குள் செல்லிடப்பேசிகளில் S.P.S வசதி?


          நாட்டின் பிரத்யேக செயற்கைக்கோள் வழிகாட்டியாக அறிமுகப்படுத்தப்படவுள்ள எஸ்.பி.எஸ். (Standard Positioning System)  வசதி, செல்லிடப்பேசியில் அடுத்தாண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


           ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1ஏ முதல் ஜி வரையிலான 7 செயற்கைக்கோள்களும் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் தொடர்ந்து விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளன. பிரத்யேக வழிகாட்டி செயற்கைக்கோள்களான இவற்றின் மூலமாக, அமெரிக்கா, ரஷியாவுக்கு அடுத்ததாக இந்தியா தன்னிறைவை அடைந்துள்ளது. 

விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ள இந்த 7 செயற்கைக்கோள்களும் முதலில் 18 மணி நேரம் வேலை செய்தன. இப்போது கடந்த சில நாள்களாக இந்தச் செயற்கைக்கோள்கள் அனைத்தும் 24 மணி நேரமும் வேலை செய்யத் தொடங்கியுள்ளன. 
இந்தச் செயற்கைக்கோள்கள் 1,500 கி.மீ. சதுர பரப்பளவுக்கு கடல் வழிகளையும், கடல் எல்லைகளையும் துல்லியமாகக் கண்காணித்து தகவல்களை அனுப்பி வருகின்றன. மேலும், இவற்றின் மூலம் தரையில் செல்லும் அனைத்து வாகனங்களையும், வானில் பறக்கும் விமானங்கள், ஹெலிகாப்டர்களையும் கண்காணிக்க முடிகிறது. 
மென்பொருள் தேவை: ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.ஸின் 7 செயற்கைக்கோள்களும் முழுமையாகத் தகவல்களை வழங்கத் தொடங்கியுள்ளதையடுத்து, அந்தச் சேவையை செல்லிடப்பேசியில் பயன்படுத்த புதிய மென்பொருளை உருவாக்க வேண்டும். இதற்காக, இந்தியா மற்றும் உலகளாவிய செல்லிடப்பேசி தயாரிப்பு நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகளை அழைத்து, பெங்களூரில் அண்மையில் இஸ்ரோ ஆலோசித்தது. அப்போது, அமெரிக்காவின் ஜி.பி.எஸ். சேவைக்கு அடுத்ததாக இந்தியாவின் எஸ்.பி.எஸ். சேவையை செல்லிடப்பேசி இயங்குதளங்களில் பொருத்தும் வகையில் மென்பொருளை உருவாக்குமாறு இஸ்ரோ கேட்டுக் கொண்டது.
மேலும், எஸ்.பி.எஸ். வழிகாட்டியை இந்தியாவின் கூகுள் தேடுதளத்திலும் பயன்படுத்த அந்த நிறுவனத்தின் இந்தியத் தலைமையகத்திலும் கலந்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. 
இனி ஜி.பி.எஸ்.க்கு இடமில்லை: அமெரிக்காவின் ஜி.பி.எஸ். (Global Positioning System) வழிகாட்டியை நாம் பயன்படுத்தாமல், நமது நாட்டின் பிரத்யேக எஸ்.பி.எஸ். வழிகாட்டியை பொதுமக்கள் பயன்படுத்தும் சூழ்நிலை விரைவில் உருவாகவுள்ளது. 
நமது நாட்டின் தகவல் வழிகாட்டிகளை அமெரிக்கா ஜிபிஎஸ் மூலம் தருவதை நிறுத்தும் நோக்கத்துடன்தான், எஸ்.பி.எஸ். வழிகாட்டி மென்பொருள் உருவாக்கப்படுகிறது. 
பிரச்னைக்கு தீர்வு காணலாம்: பாகிஸ்தான், இலங்கை கடற்கரைப் பகுதிகளை இந்தச் செயற்கைகோள்கள் முழுமையாகக் கண்காணிக்கின்றன. எனவே, எஸ்.பி.எஸ். வசதி முழுமையான செயல்பாட்டுக்கு வந்ததும், மீனவர்களின் படகுகளில் ரிசீவர்கள் பொருத்தப்படும். இந்திய எல்லையில் மீனவர்கள் இருக்கிறார்களா அல்லது இலங்கை எல்லையில் இருக்கிறார்களா என்பதை இந்தச் சாதனம் சுட்டிக் காட்டிவிடும். இதே எச்சரிக்கை கடலோரக் காவல் படைக்கும் தெரிய வரும். இதன்மூலம், மீன் பிடித்தல் தொடர்பான கடல் எல்லைப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank