அக்னி -5: ஏவுகணை சோதனை வெற்றி!
தரையில் இருந்து தரையில் உள்ள இலக்கைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் "அக்னி 5" ஏவுகணை முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதாகும். இந்த ஏவுகணை ஏற்கனவே 2012, 2013, 2015-ஆம் ஆண்டுகளில் சோதனை
செய்யப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை 5.500 கிலோமீட்டர் முதல் 5.800 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் இருக்கும் இலக்கை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. குறிப்பாக, வடக்கு சீனா வரை சென்று தாக்கும் திறன் கொண்டது. சீனாவுக்கு எதிரான பாதுகாப்பு நோக்கில் இந்த ஏவுகணை தயாரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நான்காம் முறையாக இன்று ஒடிசா மாநிலம் பலசூர் மாவட்டம் சந்திப்பூரில் உள்ள வீலர் தீவில் இருந்து இந்த ஏவுகணை செலுத்தப்பட்டது. 17 மீட்டர் நீளமும் 2 மீட்டர் அகலமும் கொண்டது இந்த ஏவுகணை. இதற்கான நான்கு கட்ட பரிசோதனைகள் நிறைவடைந்து இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கு முன் இதே இடத்தில் இருந்து கடந்த ஆண்டு ஜனவரி15ஆம் தேதி ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.