காற்று மாசுபாட்டைக் குறைக்க புது ஐடியா: பேருந்து கட்டணத்தில் 75% டிஸ்கவுன்ட் தரும் மாநில அரசு
காற்று மாசுபாட்டால் தலைநகர் டெல்லி தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறது. டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு இது கடும் சவாலாக இருப்பதால் காற்று மாசுபாட்டினைக்
குறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
இந்நிலையில் தனிநபர் போக்குவரத்தைக் குறைக்கும் வகையில் பேருந்து பயணம் செய்பவர்களுக்கு புதிய சலுகைகளை டெல்லி அரசாங்கம் வாரி வழங்கியுள்ளது. அதன்படி பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கு 75% கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மேலும், சாதாரண பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கு 5 ரூபாய் கட்டணமும், குளிர்சாதன பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கு 10 ரூபாய் கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர 21 வயதுக்குட்பட்டவர்கள், கணவனை இழந்தவர்கள், மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு இலவச பயண அட்டைகள் வழங்கப்படவுள்ளன. பொருளாதரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு மாதாந்திர கட்டணத்தில் 75% சலுகை வழங்கப்படவுள்ளது.
இதுகுறித்து டெல்லி போக்குவரத்துத்துறை கூறுகையில் "சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதே எங்களது நோக்கம். குறிப்பாக இளைஞர்கள் தங்களது பைக்குகளை விட்டு பேருந்தில் பயணம் செய்ய வேண்டும் என கருதுகிறோம். இதனால் காற்று மாசுபாடு குறையும் என கருதுகிறோம்" என்று தெரிவித்துள்ளது.
ஜனவரி 1-ம் தேதி முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என கூறப்படுகிறது.