நவம்பர் 8-ந்தேதிக்கு பின் கார், பைக் வாங்கி இருக்கீங்களா? ரெடியா இருக்கு வருமானவரி நோட்டீஸ்...
நவம்பர் 8-ந்தேதிக்கு பின் கார், பைக் வாங்கி இருக்கீங்களா? ரெடியா இருக்கு வருமானவரி நோட்டீஸ்...
மத்திய அரசு ரூபாய் நோட்டு தடை அறிவிப்பு
வெளியான நவம்பர் 8-ந்தேதிக்கு பின் சொகுசு கார், கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் வாங்கி இருப்பவர்களுக்கும், முன்பதிவு செய்து இருப்பவர்களுக்கும் வருமான வரிநோட்டீஸ் ரெடியாகி வருகிறது.
கார் வாங்கிய அனைத்து நபர்களின் முகவரிகளையும், கார் விற்பனை நிறுவனங்கள், ஏஜென்டுகளிடம் இருந்து கேட்டு பெற்றுள்ளது வருமானவரித்துறை.
நாட்டில் கருப்புபணம், கள்ளநோட்டுகளை ஒழிக்கும் வகையில், பிரதமர் மோடி ரூ. 500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என கடந்த மாதம் 8-ந்தேதி அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியான பின், கருப்பு பணம் வைத்து இருப்பவர்கள் தங்கள் பணத்தை வெள்ளையாக மாற்ற, தங்கமாகவும், சொகுசு கார், வாங்கி குவித்து வருகிறார்கள் என வருமான வரித் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நாடுமுழுவதும் வருமானவரித்துறை சோதனைகள் தீவிரமா நடந்துவருகின்றன. கோடிக்கணக்கில் பணமும், தங்கமும் சோதனையில் பிடிபட்டு வருகின்றன. இந்நிலையில், வருமான வரித் துறையினர் கவனம், நவம்பர் 8-ந்தேதிக்குபின், கார் வாங்கியவர்கள் பக்கம் திருப்பத் தொடங்கியுள்ளது.
நாட்டில் உள்ள முக்கிய கார் விற்பனையாளர்கள், கார் விற்பனை ஏஜென்டுகளிடம் நவம்பர் 8-ந்தேதிக்கு பின் கார் முன்பதிவு செய்தவர்கள், கார் வாங்கியவர்கள் பட்டியலை வருமான வரித்துறை கேட்டுப் பெற்றுள்ளது. மேலும், நவம்பர் மாதம் கார் விற்பனை நிலவரம், கார் விற்பனையாளர்கள், ஏஜென்டுகள் வங்கியில் செய்தெடபாசிட் ஆகியவற்றையும் வருமான வரித்துறை வாங்கியுள்ளனர்.
நவம்பர் 8-ந் தேதிக்கு பின் சொகுசுகார் விற்பனை மட்டும் அல்லாது, அனைத்து வகையான, யாரெல்லாம் கார் வாங்கி இருக்கிறார்களோ அனைவருக்கும் ஜனவரி 1 முதல் 15 ந் தேதிக்குள் வருமான வரித் துறை சார்பில்நோட்டீஸ் அனுப்பப்படலாம்.
வருமானவரித்துறை உத்தரவைத் தொடர்ந்து நாடுமுழுவதும் உள்ள கார் விற்பனை டீலர்கள், தங்களின் விற்பனை நிலவரங்களை அதிகாரிகளிடம் சமர்பித்து வருகின்றனர்.
இது குறித்து கார் டீலர் ஒருவர் கூறுகையில், “ எங்களிடம் நவம்பர் 8-ந் தேதிக்கு பின் கார் வாங்கிய, முன்பதிவு செய்த வாடிக்கையாளர் விவரம் கேட்டு, வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கருப்பு பணம் மூலம், கார் வாங்கலாம் என வருமான வரித் துறை சந்தேகிப்பதால், இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது'' எனத் தெரிவித்தார்.
இந்த செய்தியை வருமான வரித் துறையினரும் உறுதி செய்துள்ளனர். நாடுமுழுவதும் உள்ள கார் டீலர்கள்,ஏஜென்டுகளுக்கு நவம்பர் மாத விற்பனை, வங்கி இருப்பு, முன்பதிவு நிலவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.