சம்பளத்தில் வருமான வரி பிடித்தமா? : நிறுத்த புதிய வசதி அறிமுகம்


           வருமான வரி பிடித்தம் செய்யும், டி.டி.எஸ்., திட்டத்தில், புதிய சேவையை, வருமான வரித் துறை அறிமுகம் செய்துள்ள
து.

           சென்னை, தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், தமிழகம், புதுச்சேரி பிராந்திய வருமான வரி முதன்மை தலைமை ஆணையர், ஏ.கே.ஸ்ரீவஸ்தவா, நேற்று, இந்த சேவையை துவக்கி வைத்தார்.

அவர் பேசியதாவது: ஊழியர்களிடம், அவர்கள் பணிபுரியும் அலுவலகங்களிலேயே, டி.டி.எஸ்., என்ற முறையில், வருமானத்திற்கு தக்கபடி, மாத சம்பளத்தில் வரிப் பிடித்தம் செய்யப்படுகிறது. 
படிவம் - 13 : அது தேவையில்லை என, ஊழியர்கள் விரும்பினால், வருமான வரித் துறைக்கும், அலுவலகத்திற்கும் தகவல் தெரிவித்து, படிவம் - 13ஐ நிரப்பி தரலாம். அந்த வசதியை, இனி தமிழகத்தில், 'ஆன்லைனில்' பெறலாம். அதற்காக, www.tnincometax.gov.in என்ற இணையதளத்தில், சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. அந்த இணையதளத்தில், 'tds (for197)' என்ற பகுதியினுள் நுழைந்து, சம்பளதாரர்கள், தங்களது முந்தைய, இரு ஆண்டு கணக்குகளை பதிவு செய்தால் போதும். அலுவலகத்தில் வரிப் பிடித்தம் செய்வது நிறுத்தப்படும் அல்லது தேவைக்கேற்ப குறைக்கப்படும். இவ்வசதி அறிமுகம் செய்யப்படும், மூன்றாவது மாநிலம், தமிழகம். இந்தியாவை, 'டிஜிட்டல்' மயமாக்க வேண்டும் என, மத்திய அரசு முனைப்பாக செயல்படுகிறது. அந்த வேகத்திற்கு, வருமான வரித் துறையும் ஈடுகொடுத்து வருகிறது. அதற்கு, இப்புதிய சேவையே உதாரணம். கணினிமயமாக்கல் காரணமாக, வரி செலுத்தாத நிறுவனங்களை எளிதில் கண்டுபிடிக்க முடிகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 
மூன்றில் ஒரு பங்கு : வருமான வரித் துறை இயக்குனர் ஜெனரல், முரளிகுமார் பேசுகையில், ''வருமான வரித் துறைக்கு கிடைக்கும் வருவாயில், மூன்றில் ஒரு பங்கு, டி.டி.எஸ்., மூலமாகவே கிடைக்கிறது,'' என்றார். மேலும், டி.டி.எஸ்., பிரிவு ஆணையர், சேகர், முதன்மை ஆணையர், ஹர்லால் நாயக் ஆகியோரும் பேசினர்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)