மாணவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்க 'ஸ்டூடண்ட் கனெக்ட்' சேவை
''கல்லுாரி, பல்கலை மாணவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்க 'ஸ்டூடண்ட் கனெக்ட்' சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது,'' என, மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் மணீ
ஸ்வரராஜா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: இச்சேவையின் மூலம் நாட்டில் 37 பாஸ்போர்ட் அலுவலகங்களுக்குட்பட்ட கல்லுாரி, பல்கலை மாணவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தற்போது 89 சேவை மையங்கள் மூலம் தினமும் 50 ஆயிரம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது.
'ஸ்டூடண்ட் கனெக்ட்' மூலம் கல்லுாரி, பல்கலைகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும். மாணவர்கள் வேலைநாட்களில் அருகிலுள்ள சேவை மையத்திற்கு சென்று விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இந்த வசதியை கல்லுாரி, பல்கலை பேராசிரியர்கள், ஊழியர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். மாணவர்கள் தங்கியுள்ள முகவரி அல்லது பெற்றோர் நிரந்தர முகவரியில் பாஸ்போர்ட் பெறலாம். பிறப்பு சான்று, 10, 12ம் வகுப்பு மதிப்பெண் சான்று, முகவரி ஆதாரமாக ஆதார், வாக்காளர் அடையாள அட்டை உட்பட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்று இணைக்க வேண்டும். www.passportindia.gov.in என்ற இணையத்தில் மேலும் விவரங்களை அறியலாம்.பாஸ்போர்ட் சேவை மையங்களில், தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க விண்ணப்பங்கள் நிலுவையில் வைக்கப்படும். சமர்ப்பிக்காதவர்கள், 60 நாட்களுக்குள் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். தவறினால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும், என்றார்.