பிகாம் பட்டப்படிப்புக்கு நுழைவுத் தேர்வு?
தொழில்துறை படிப்புகளான மருத்துவம், பொறியியல், விவசாயம், சட்டம் ஆகிய படிப்புகளில் சேருவதற்கு மட்டுமே இதுவரை நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், டெல்லி பல்கலைக்கழகத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் பி.காம் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
டெல்லி பல்கலைக்கழகத்தில் தற்போது முதுநிலை படிப்புகளுக்கும், தொழில்துறை படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. மற்ற இளநிலை படிப்புகளுக்கு பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். டெல்லி பல்கலைக் கழகம் மட்டுமில்லாது அனைத்து பல்கலைக் கழகங்களில் இதுவே நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில், பி.காம் படிப்புக்கும் நுழைவுத் தேர்வு நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக டெல்லி பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை கமிட்டியின் ஒருங்கிணைப்பாளர் மனோஜ் கன்னா தெரிவித்துள்ளார். இப்பல்கலைக் கழகத்தில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டால், நாடு முழுவதும் உள்ள அனைத்து பலகலைக் கழகங்கங்களும் அதனை பின்பற்றத் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பொறியியல் படிப்புக்கு வேலைவாய்ப்புக் குறையத் தொடங்கியதால், இப்போது மாணவர்கள் பிகாம் படிப்பை அதிக அளவில் தேர்ந்தெடுக்கின்றனர் என்பதால் தனியார் கல்லூரிகளில் பிகாம் பட்டப்படிப்புக்கு அதிக டிமாண்ட் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நுழைவுத் தேர்வு வைக்கப்பட்டால் மாணவர்களின் நலன் பாதிக்கப்படும் என்பது நிதர்சனம்.