வருகிறது 'டிஜிட்டல் கரன்சி' மத்திய அரசு திட்டம்
செல்லாததாக அறிவிக்கப்பட்ட, 15 லட்சம் கோடி ரூபாய் முழுவதும், புதிய நோட்டுகளாக வெளியிடப்படாது; இதில் ஏற்படும் இடைவெளியை, 'டிஜிட்டல் கரன்சி' பூர்த்தி செய்யும்,'' என, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
டில்லியில் நேற்று, தொழில்துறை சம்மேளனத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற, மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அருண் ஜெட்லி பேசியதாவது: செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியான, நவ., 8ம் தேதி வரை, 1,716 கோடி, 500 ரூபாய் நோட்டுகளும், 685 கோடி, 1,000 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் இருந்தன.
இவற்றின் மதிப்பு, 15.43 லட்சம் கோடி ரூபாய். அதிகளவில் பணப் புழக்கம் இருப்பது, வரிஏய்ப்பு, கறுப்புப்பணம் அதிகரிக்க வழி ஏற்படுத்தும். இத்தகைய பணம், கிரிமினல் நடவடிக்கைகளுக்கு அதிகளவில் பயன்படுத்தப் படுகிறது.
செல்லாத ரூபாய் நோட்டுகளுக்கு சமமாக இல்லா மல், குறைந்தளவில், புதிய நோட்டுகளை வெளியிடுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படு கின்றன. இதில் ஏற்படும் இடைவெளியை, 'டிஜிட் டல் கரன்சி'யால் பூர்த்தி செய்ய, ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
ஐந்து வாரங்களாக, 'டிஜிட்டல்' முறை பரிவர்த் தனைகள் அதிகளவில் நடந்து வருகின்றன. மக்க ளின் பயன்பாட்டுக்கு, புதிய நோட்டுகள் முழுமை யாக வந்தபின், 70 ஆண்டாக இருந்த நிலை மாறி, புதிய இயல்பு நிலை உருவாகும்.
நம் நாட்டில், 70 ஆண்டாக நிலவி வந்த இயல்பு நிலை, ஒவ்வொரு குடிமகனுக்கும் பழகிப் போய் விட்டது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒரு பகுதியாக, மிகப் பெரியளவில் ரொக்க பணப்புழக்கம் நிலவியது.
இதனால், சமூக, பொருளாதார சூழலில், பெரியள வில் தீமைகள் ஏற்பட்டன; முறையாக வரி செலுத் தாமல், ஏய்ப்புகள் நடந்தன. வங்கி நடைமுறைக் குள் வராமல், பணத்தை பதுக்கி வைத்து, குற்ற நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் நிலை காணப் பட்டது.இந்த நிலையை மாற்றும் நோக்கில்,மத்தியஅரசு, துணிச்சலான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
ஜி.எஸ்.டி., தாமதம்
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, மேலும் கூறியதாவது: ஜி.எஸ்.டி., என்பது, பரிவர்த்தனை வரி; வருமான வரி அல்ல; எனவே, நிதியாண்டின் எந்த சமயத்திலும், ஜி.எஸ்.டி.,யை அமல்படுத்தலாம்.
அரசியல் சட்ட தேவையை பொறுத்து, ஏப்., 1 முதல், செப்., 16க்குள், ஜி.எஸ்.டி., அமலாகும் வாய்ப்பு உள்ளது. சில சிறிய பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டி உள்ளதால், ஜி.எஸ். டி., அமலில் தாமதம் ஏற்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.