உணவை செய்தி தாள்களில் வைத்து கொடுக்க தடை!!!
‘செய்தித் தாள்களில், உணவுகளை, ‘பேக்’ செய்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்பு குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்’ என, இந்திய உணவு தரக் கட்டுப்பாட்டு
அமைப்பு, அனைத்து மாநிலங்களின் உணவு பாதுகாப்பு அமைப்புகளுக்கு கடிதம் எழுதியுள்ளது.
அதன் விபரம்:செய்தித் தாள்களில் பயன்படுத்தும், ‘மை’ உடல் நலனுக்கு ஊறுவிளைவிக்கும். அதில், வண்ணம் உள்ளிட்ட பிற ரசாயனப் பொருட்களின் சேர்க்கை உள்ளது. உணவுப் பொட்டலங்களுக்கு, இத்தகைய செய்தித் தாள்கள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, உணவு தொழிலில் உள்ள, அமைப்பு சாரா துறையினர், உணவை பொட்டலம் கட்ட, செய்தித் தாள்களை உபயோகிக்கின்றனர்.
அது போல, தின்பண்டத்தில் உள்ள எண்ணெயை உறிஞ்சவும், பலர் செய்தித் தாள்களை பயன்படுத்துகின்றனர். இதனால், தின்பண்டங்களில், ரசாயனப் பொருட்கள் கலந்து, அவற்றை உண்போரின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இத்தகைய அபாயகரமான பயன்பாட்டை குறைக்க, உணவு தயாரித்து விற்பனை செய்வோர் மற்றும் நுகர்வோரிடையே விழிப்புணர்வு பிரசாரங்களை, மாநில மற்றும் யூனியன் பிரதேச உணவு பாதுகாப்பு அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும். செய்தித் தாள்களில், உணவுகள், தின்பண்டங்கள் உள்ளிட்டவற்றை மடித்துக் கொடுக்கும் வழக்கத்தை, அறவே நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.