ஒவ்வொரு புயலுக்கும் தனித்தனிப் பெயர் சூட்டுவதன் நோக்கம் தெரியுமா?


     வானிலை ஆய்வாளர்களும், கடல் மாலுமிகளும், பொதுமக்களும் வானிலை எச்சரிக்கையைச் சரியாகப் புரிந்துகொண்டு செயல்படுவதற்கும் ஞாபகத்தில் வைத்துக்கொ
ள்வதற்கு வசதியாகவே ஒவ்வொரு புயலுக்கும் தனித்தனிப் பெயர்கள் கொடுக்கப்படுகின்றன.
மேலும் புயலுக்கு முன்பு பேரழிவு ஆபத்து பற்றிய விழிப்புணர்வு, தயாரிப்பு, மேலாண்மை, பாதிப்பு குறைப்பு நடவடிக்கைகள் போன்றவற்றை மேற்கொள்வதற்குப் புயலின் பெயர்கள் உதவும்.
புயல் சின்னம் உருவாகும் போது எல்லாம் அதற்கு ஒரு பெயர் சூட்டும் வழக்கம் 20 நூற்றாண்டில் முற்பகுதியில் உருவானது. பெரும்பாலான புயல்கள் ஒரு வாரமோ அல்லது அதற்கு அதிகமான காலத்துக்கோ மையம் கொண்டிருக்கலாம். ஒரே கடற்பகுதியில் ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் அடுத்தடுத்து உருவாகியிருக்கலாம். அல்லது ஒரு புயல் வலுவிழக்கும் நேரத்திலேயே, மற்றொரு புதிய புயல் உருவாகலாம். ஒரு புயல் எங்கு உருவானது, எந்தத் திசையில் வருகிறது என்பதை உடனடியாக அறிவதற்கும், எச்சரிக்கை அடைவதற்கும் வசதியாகவும், புயலுக்கு எண் கொடுப்பதால் ஏற்படும் குழப்பத்தை இதன்மூலம் தவிர்க்கலாம் என்பதற்காக மனிதர்களை போல புயல்களுக்கும் பெயர் சூட்ட தொடங்கியுள்ளனர்.
ஆஸ்திரேலியா தான் இந்த பழக்கத்தை முதன் முதலில் தொடங்கியது. பெயர்கள் சுருக்கமாக இருக்க வேண்டும் என்பதே அடிப்படை விதி. இரண்டாம் உலகப் போர் காலத்தில் (1939-1945) புயல்களை அடையாளம் காண்பதற்குப் பெண்களின் பெயர்களை வைக்கும் வழக்கத்தை வானிலை ஆய்வாளர்கள் தொடங்கி வைத்தனர். 1953-இல் இருந்து அமெரிக்காவிலும் இது தொடர்ந்தது. ஆனால், அழிவை ஏற்படுத்தும் புயல்களுக்குப் பெண்களின் பெயரைச் சூட்டுவதா என்று பெண்ணியவாதிகள் எதிர்க்க ஆரம்பித்த பிறகு, 1978 முதல் ஆண்களின் பெயர்களும் இந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டன.
இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயலுக்கு இந்தியா, இலங்கை, வங்கதேசம், தாய்லாந்து, மியான்மர், மாலத்தீவு, ஓமன் ஆகிய நாடுகள் சுழற்சி முறையில் பெயர் சூட்டி வருகின்றன. புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை 2000-ஆம் ஆண்டில் தொடங்கியது. தில்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம் 2004-ஆம் ஆண்டு செப்டம்பரில் இருந்து புயல்களுக்குப் பெயர் வைக்க 64 பெயர்களைப் பட்டியலிட்டுள்ளது.
வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் இந்தப் பெயர்களை வழங்கியுள்ளன. இதில் இந்தியா கொடுத்து ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பெயர்கள் அக்னி, ஆகாஷ், பிஜ்லி, ஜல் (நான்கு பூதங்கள்), லெஹர் (அலை). மேக், சாகர், வாயு. இந்த 8 பெயர்களுமே பஞ்ச பூதங்களை குறிப்பவை என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக சென்னையைத் தாக்கிய "நடா' புயலுக்கு ஓமன் அப்பெயரைச் சூட்டியிருந்தது.
இந்நிலையில், சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தையும், தென் பகுதி ஆந்திரத்தையும் தாக்கியுள்ள "வர்தா' புயலுக்கு பாகிஸ்தான் அப்பெயரைச் சூட்டியுள்ளது. உருதுச் செல்லான வர்தாவுக்கு தமிழில் சிவப்பு ரோஜா என்று பொருளாகும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)