பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க புதிய விதிமுறைகள்
பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறையில் புதிய விதிமுறைகள் பல கொண்டுவரப்பட்டு இருப்பதாக சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பி.கே.அசோக் பாபு தெரிவித்தார்.
சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பி.கே.அசோக் பாபு சென்னை சாஸ்திரிபவனில் உள்ள பத்திரிகையாளர் அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விதி தளர்த்தப்பட்டது
பாஸ்போர்ட் விண்ணப்பத்துடன் பல்வேறு ஆவணங்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். 100 விண்ணப்பங்கள் வருகிறது என்றால், அதில் 20 முதல் 30 விண்ணப்பங்களில் சரியான ஆவணங்கள் இல்லாததால் அதை நிறைவு செய்வதில் குறைபாடு ஏற்படுகிறது.
இதுபோன்ற குறைவுகளை நிவர்த்தி செய்ய பல்வேறு புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, முன்பு 1989-ம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்கள் பிறந்த தேதி சான்றிதழை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது அந்த விதிமுறையை தளர்த்தி உள்ளோம்.
ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம்
பிறந்த தேதி சான்றிதழ் வைத்திருந்தால் அவர்கள் அதை சமர்ப்பிக்கலாம். அப்படி இல்லாதபட்சத்தில் பள்ளி சான்றிதழ், மெட்ரிகுலேசன் சான்றிதழ், ஆதார் அட்டை, பான்கார்டு, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பொது ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் பத்திரம் ஆகியவற்றை பயன்படுத்தி கொள்ளலாம்.
அதேபோல், விண்ணப்பதாரர் தாய் அல்லது தந்தையரிடம் வளர்ந்து இருக்கலாம். அவர்கள் யாராவது ஒருவரின் பெயரை குறிப்பிட விருப்பம் தெரிவிக்கவில்லை என்று கூறினால் அவர்கள் அந்த பெயரை குறிப்பிட தேவையில்லை. ஆனால் முன்பெல்லாம் தாய், தந்தை இருவரின் பெயரையும் கண்டிப்பாக குறிப்பிட வேண்டிய கட்டாயம் இருந்தது.
விண்ணப்பதாரர் பின் இணைப்புகளாக இணைக்கும் ஆவணங்களில் நோட்டரி பப்ளிக், ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு ஆகியோரிடம் கையெழுத்து வாங்கி வர வேண்டும். ஆனால் தற்போது விண்ணப்பதாரர்களே அந்த பின் இணைப்புகளில் சுய கையெழுத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் இனி நோட்டரி பப்ளிக், ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு ஆகியோரிடம் கையெழுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை.
திருமண சான்றிதழ்
திருமண சான்றிதழ் என்பது முன்பு கண்டிப்பாக இணைக்க வேண்டும். தற்போது அதை இணைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆதரவற்றோர் குழந்தைகள் பாஸ்போர்ட் விண்ணப்பித்தால் அவர்கள் பிறந்த தேதி குறித்து அந்த காப்பகத்தின் இருக்கும் மேலதிகாரி இந்த தேதியில் தான் அவர் பிறந்தார் என்று உறுதி செய்தால் நாங்கள் அந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வோம்.
மணவாழ்க்கைக்கு வெளியே பிறந்த குழந்தைகள் விண்ணப்பிக்கும் போது அவர்களுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. தற்போது அவர்களுக்கு எளிமையாக்கப்பட்டு இருக்கிறது. பின் இணைப்பு ‘ஜி’-யில் அவர்கள் கையெழுத்திட்டு வழங்கினால் போதும்.
இதேபோல், அரசு வேலையில் இருப்பவர்கள் தடையில்லா சான்றிதழ் (என்.ஓ.சி.) வாங்கி அதை வழங்க வேண்டும். ஆனால் அவர் இனிமேல் தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டிய அவசியம் இல்லை. மாறாக, அரசிடம் விண்ணப்பிப்பது தொடர்பாக தெரிவித்துவிட்டேன் என்று எழுதி கொடுத்தால் போதும். இதுபோல் பல்வேறு விதமான புதிய விதிமுறைகள் செய்யப்பட்டுள்ளன.
புதுச்சேரி, காரைக்கால்...
ஆன்-லைன் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறை மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்று பலர் கூறுகிறார்கள். அதை எளிதாக்கும் வகையில், அரசு இ-சேவை மையத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதற்கும் வழி ஏற்படுத்தி இருக்கிறோம். ஆனால் பலருக்கு அது தெரிவதில்லை.
புதுச்சேரி, காரைக்காலில் மினி பாஸ்போர்ட் சேவை மையம் அமைத்தோம். பாஸ்போர்ட் வழங்குவதில் ஏ, பி, சி என 3 முறைகள் உள்ளன. அதில் முதல் 2 முறைகளை புதுச்சேரி, காரைக்காலில் செய்தாலும் இறுதியாக சென்னைக்கு வந்தால் தான் பாஸ்போர்ட்டை பெற முடியும் என்ற நிலை இருந்தது.
தற்போது புதுச்சேரி, காரைக்காலில் 3 முறைகளையும் நிறைவு செய்து பாஸ்போர்ட் பெறுவதற்கான வசதியை செய்து இருக்கிறோம். அதை வருகிற 2-ந்தேதி முதல் தொடங்க இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.