கடைசி நேரத்தில் ரயில் பயணம் மேற்கொள்பவரா நீங்கள்? சலுகை விலையில் பயணச்சீட்டு !!
கடைசி நேரத்தில் அவசர அவசரமாக ஓடிப் போய் ரயிலில் ஏறிப் பயணிப்பவர்களுக்கு ரயில்வே நிர்வாகம் சில சலுகைகளை அறிவித்துள்ளது.
கடைசி நேரத்தில் பயணிப்பவர்கள் ரயில்வே டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் வாங்கும் போது படுக்கை வசதி
கொண்ட ரிசர்வேஷன் டிக்கெட் இருக்கிறதா என்று கேட்க வேண்டும். ரிசர்வேஷன் கோச்சில் காலி இடம் இருக்கும் பட்சத்தில் அதற்கான டிக்கெட்டை வாங்கி படுக்கை வசதி கொண்ட ரிசர்வேஷன் கோச்சில் பயணிக்கலாம். இவ்வாறு டிக்கெட் வாங்கும்போது பத்து சதவீத தள்ளுபடியும் உண்டு என்பது தான் முக்கியமான விஷயம்.
கடைசி நேரத்தில் அட்டவணை (சார்ட்) தயாரான பின்பு தான் இந்தச் சலுகையினை பெற முடியும் என்பதால் ரயில் புறப்படுவதற்கு இரண்டரை மணி நேரத்துக்குள் டிக்கெட் வாங்குபவர்கள் இந்தச் சலுகையினை பயன்படுத்திக்கொள்ளலாம். இதனை அடுத்த ஆறு மாதத்துக்குப் பரிசோதனை முறையில் வைத்திருப்பார்கள். அதிகளவில் வரவேற்பு இருக்கும் பட்சத்தில் இதனைத் தொடர்ந்து கடைப்பிடிப்பார்கள்.
கடைசி நேரத்தில் வாங்கும் தள்ளுபடி டிக்கெட்டுக்கு மற்ற டிக்கெட்டில் உள்ளது போன்ற ரிசர்வேஷன் கட்டணம், அதிகவேக ரயில் கட்டணம், சேவை வரி போன்றவை எல்லாம் இருக்கும். அடிப்படை பயண கட்டணத்தில் மட்டும் பத்து சதவீத தள்ளுபடி என்பதை நினைவில் கொள்ளவும். ஏற்கெனவே இன்டர்நெட்டில் ரயில் டிக்கெட் பதிவு செய்பவர்களுக்கு சேவை வரி தள்ளுபடி செய்திருந்தது நினைவில் கொள்ளவும்.
கடந்த செப்டம்பர் மாதம் ராஜஸ்தானி, சதாப்தி, டொரண்டோ ரயில்களில் கடைசி நேரத்தில் பயணித்தால் சீட்டு வாங்கும்போது டிமாண்ட் அதிகளவில் இருந்தால் 50% வரை டிக்கெட் உயர்த்தப்பட்டது. ஆனால் மக்களிடையே பெரிய அளவில் வரவேற்பு இல்லை. இதனை அறிவித்த பின்பு ராஜஸ்தானி, சதாப்தி, டொரண்டே ரயில்களில் அதிக காலியிடங்கள் இருந்திருக்கின்றன. தக்கல் முறையில் டிக்கெட் பதிவு செய்வதும் குறைந்திருக்கிறது. இதனால் இப்போது தக்கலில் பதிவு செய்யும் டிக்கெட்டின் எண்ணிக்கையை 10% சதவீத இடத்தைக் குறைத்து இருக்கிறார்கள்.
இனி வரும் காலங்களில் அதிக பயணிகள் கொண்ட ரயில்களில் ஆர்ஏசி எண்ணிக்கையையும் ஒவ்வொரு ரயிலும் அதிகரிக்க முடிவு செய்து இருக்கிறார்கள். ஒவ்வொரு இரண்டாவது படுத்துறங்கும் பெட்டியிலும் ஆர்ஏசி ஐந்தில் இருந்து ஏழாகவும் உயர்த்த உள்ளார்கள். இதன் மூலம் ஒரே கோச்சில் பதினான்கு பேர் ஆர்ஏசியில் இடம் பெறுவார்கள். இதைப்போலவே ஏசி கோச்சில் இரண்டிலிருந்து நான்காக உயர்த்த உள்ளார்கள். இதன் மூலம் ஒரு கோச்சில் எட்டு பேர் இடம்பிடிப்பார்கள். இதைப்போல இரண்டாம் வகுப்பு ஏசி வகுப்பில் இரண்டு பேருக்கு பதிலாக மூன்று பேர் என மொத்தம் 6 பேர் இடம்பிடிக்க உள்ளார்கள்.
ஆனால் இந்த முறை நீண்ட தூரம் பயணிப்பவர்களுக்குச் சிரமத்தையே தரும். டிடிஆர் எப்போது வருவார்? எப்போது நமக்கு ஒதுக்கீடு செய்வார்கள் என்ற காத்திருக்க வேண்டி இருக்கிறது. இதன் மூலம் ஒரு நபர் படுக்கும் வசதி கொண்ட சீட்டில் இரண்டு பேர் நீண்ட தூரம் அமர்ந்து செல்வார்கள். அதுவும் முழு கட்டணத்தையும் செலுத்தி இருப்பார்கள் என்பதால் ரயில்வேக்கு லாபம்.
ராஜஸ்தானி, டொரண்டோ, சதாப்தி ரயில்களில் தக்கல் அளவைக் குறைத்த அதே வேளையில், அதிகளவில் பயணிக்கும் ரயில்களில் எங்கு அதிகளவில் பயணிக்கிறார்கள் என்பதைப் பொறுத்து இனி வரும் காலங்களில் இதர ரயில்களில் தக்கலின் அளவினை 30% வரை அதிகரிக்கவும் முடிவு செய்து இருக்கிறார்கள். இதன் மூலம், தக்கல் சீட்டு பெறும் கூடுதல் கட்டணத்தால் கணிசமான வருமானத்தை எதிர்பார்த்து இருக்கிறது ரயில்வே.