கண்துடைப்பாகும் 'சிலாஸ்' தேர்வுகள் : 'சர்வே' முடிவால் சறுக்கும் கல்வித்துறை!
தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) சார்பில் நடத்தப்படும் மாணவர் திறனை மதிப்பீடு செய்யும் 'சிலாஸ்' (ஸ்டேட் லெவல் அச்சிவ்மென்ட் சர்வே) தேர்வுகள் கண்துடைப்பாகி விட்டது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், தொடக்க கல்வி மாணவர்கள் முந்தைய கல்வியாண்டில் பெற்ற, கற்றல் அடைவு திறன் (கற்றல் திறன்) தொடர்பான மதிப்பீட்டை, எஸ்.எஸ்.ஏ., மேற்கொள்கிறது. இதன்படி மூன்று, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடங்களில் 'சிலாஸ்' தேர்வு நடத்தி அவர்கள் அடைவு திறன் குறித்து மாநில அளவில் சர்வே எடுக்கப்படுகிறது.
இந்தாண்டு இத்தேர்வு, டிச.,19ல் துவங்கி 22ல் (இன்று) முடிகிறது. இத்தேர்வு எழுத, ஒவ்வொரு ஆண்டும், ஒரே பள்ளிகளை தேர்வு செய்வதாகவும், ஒரு வகுப்பில் 25க்கு குறைவாக மாணவர் எண்ணிக்கை உள்ள பள்ளிகள் தேர்வு செய்யப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், பெரும்பாலான பள்ளிகளில், 'வினாவிற்கான விடையை ஆசிரியர் சொல்லிக் கொடுப்பதால், மாணவர் அடைவு திறனை சோதிக்க வேண்டும் என்ற இத்தேர்வு நோக்கமே கேள்விக் குறியாகி விட்டது' எனவும் சர்ச்சை எழுந்துள்ளது. இதுதவிர, கல்வி செய்திகளை பதிவிடும் ஒருசில தனியார் 'வெப்சைட்'கள், இத்தேர்வு நடப்பதற்கு முன்பே வினாவிற்கான விடைகளை பதிவிடுகின்றன எனவும் ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.