தமிழகத்தில், அரசு, 'இ - சேவை' மைய ஊழியர்கள், பணியில் அலட்சியம் காட்டுவது, ரகசிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, ஊழியர்களுக்கு, வேலை அடிப்படையில் ஊதியமும், ஊக்கத் தொகையும் தர, அரசு முடிவெடுத்துள்ளது
.
தமிழகத்தில், அரசு கேபிள், 'டிவி' நிறுவனம், தமிழக மின்னணு நிறுவனம் போன்ற அரசு நிறுவனங்கள் சார்பில், 10 ஆயிரத்துக்கும் அதிகமான, இ - சேவை மையங்கள் நடத்தப்படுகின்றன. அங்கு, முதியோர் ஓய்வூதியம், ஜாதிச் சான்று உள்ளிட்ட, நுாற்றுக்கும் மேற்பட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன. அதில், அரசு கேபிள் நிறுவனம் நடத்தும், 486 மையங்களில், வாடிக்கையாளர்களை அலைக்கழிப்பதாக, ஊழியர்கள் மீது புகார் வந்துள்ளது.
இதுகுறித்து, அரசு கேபிள், 'டிவி' மேலாண் இயக்குனர், குமரகுருபரன் கூறியதாவது: எங்களது, இ - சேவை மையங்களில், 790 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்; ஒருவருக்கு மாதம், 8,000 ரூபாய் ஊதியம் வழங்கப்பட்டது. அவர்களில் சிலர், பொது மக்களை அலைக்கழிப்பதாக புகார் வந்தது. இதையடுத்து, மின் ஆளுமை முகமையை சேர்ந்த, 12 பேர் குழு, மாநிலம் முழுவதும் ரகசிய ஆய்வு நடத்தியது. அதில், பல இடங்களில், பிற்பகலுக்கு மேல் மனுக்களை வாங்குவதில்லை என்றும், 'டோக்கன்' கொடுத்து, மறுநாள் வரும்படி, கிராம மக்களை அலைக்கழிக்கின்றனர் என்றும் தெரிய வந்தது. வாக்காளர் அட்டை, 'ஆதார்' அட்டை, மின் கட்டணம் செலுத்துதல் போன்ற கூடுதல் திட்டங்களை, மக்களுக்கு விளக்கிக் கூறுவதில்லை. அதனால், மையத்திற்கு கிடைக்க வேண்டிய வருவாய் குறைகிறது. அதனால், 4,000 ரூபாய் ஊதியம் தரவும், பின், வேலைக்கேற்ற ஊதியம் தரவும் முடிவெடுத்தோம். அதாவது, பொது மக்களிடம் இருந்து பெறப்படும் ஒரு விண்ணப்பத்திற்கு, ஒரு ரூபாய் கமிஷன் கிடைக்கும். அரக்கோணத்தை சேர்ந்த ஒரு பெண், இம்மாதம், 9,500 ரூபாய் வாங்கியுள்ளார். மேலும், சிறப்பாக செயல்படும் ஊழியர்களுக்கு, மாதந்தோறும், 1,000 ரூபாய் ஊக்கத் தொகையும் அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.