பள்ளிகளுக்கு அருகில் தின்பண்ட கடைகளுக்கு தடை
பள்ளிகளுக்கு அருகில் சுகாதாரமற்ற தின்பண்டங்களை விற்க, தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, பள்ளிக் கல்வி இயக்குனர், கண்ணப்பன், அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதம்:பள்ளியில் வழங்கப்படும் சத்துணவு, முற்றிலும் துாய்மையாக சமைக்கப்பட வேண்டும்.
அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட உணவு பொருட்கள், துாய்மையான நீரில் சுத்தம் செய்யப்பட வேண்டும். சமையல் கூடம், உணவு அருந்தும் இடத்தை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
விழா நாட்களில், தன்னார்வ நிறுவனங்கள் வெளியிலிருந்து கொண்டு வரும், உணவின் தரத்தை சோதித்த பின்பே, மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.பள்ளி வளாகத்திற்கு அருகில் விற்கப்படும், சுகாதாரம் இல்லாத தின்பண்டங்களை உண்ணக் கூடாது என, மாணவர்களுக்கு, தினமும் அறிவுறுத்த வேண்டும்.
பள்ளிகளின் முன், சுகாதாரமற்ற உணவு விற்கும் கடைகளை அனுமதிக்க கூடாது; முற்றிலும் தடை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.