போட்டி தேர்வை எதிர்கொள்ள சிறப்பு பயிற்சி வகுப்புகள் துவக்கம்!


மத்திய அரசு நடத்தும் இருவித போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ள,
அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் மூலம், அரசு பள்ளி மாணவர்கள் சாதிக்கும் வகையில், காஞ்சிபுரம் மா
வட்டத்தில் சிறப்பு மையங்கள் துவக்கப்பட்டு உள்ளன.

மத்திய அரசு நடத்தும் தேசிய திறனாய்வு தேர்வு மற்றும் தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவி திட்ட தேர்வு ஆகிய இரு தேர்வுகளையும் எதிர்கொள்ள, அரசு பள்ளி மாணவர்கள் சிரமப்படுகின்றனர். 
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இத்தேர்வில், சொற்ப அளவிலேயே முதல் சுற்றுக்கு செல்கின்றனர். அடுத்த சுற்றில் தேர்ச்சி அடையாமல் தோல்வியோடு திரும்புகின்றனர்.ஆனால், சி.பி.எஸ்.இ., மற்றும் மெட்ரிக்குலேஷன் மாணவர்கள் எளிதாக வெற்றி பெறுகின்றனர். 
இதுவரை, தேசிய திறனாய்வு தேர்வில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து அரசு பள்ளி மாணவர்கள் யாரும் தேர்ச்சியடைவில்லை என, கூறப்படுகிறது.இந்த சூழலில், மத்திய அரசின் காஞ்சிபுரம் மாவட்ட அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் சார்பாக, அரசு பள்ளி மாணவ, மாணவியர் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள, ஒருங்கிணைந்த பயிற்சியை மாணவர்களுக்கு அளிக்க முடிவு செய்தது. 
அதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் பழைய தாம்பரம் ஆகிய மூன்று இடங்களில், பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மாவட்டத்தில் முதன் முறையாக, இந்த மூன்று மையங்களிலும், இரு விதமான தேர்வுகளிலும் பங்கேற்கவுள்ள, 1,325 மாணவர்களுக்கு கடந்த சனிக்கிழமை முதல் பயிற்சி துவங்கிஉள்ளது.
இதுகுறித்து, பயிற்சி நடத்தும் ஆசிரியர்கள் கூறியதாவது:
தேசிய திறனாய்வு தேர்வை பொறுத்தவரையில், அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி பெற முடியாமல் திணறுகின்றனர். இந்த தேர்வில், இரண்டு சுற்றுகள் உள்ளன. முதல் சுற்றில், தமிழில் கேள்விகள் கேட்கப்படும். இதில் தேர்வாகும் அரசு பள்ளி மாணவர்கள், இரண்டாம் சுற்றில், ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்பதால், அதில் தோல்வி அடைகின்றனர்.
இந்த சிக்கலான சூழ்நிலையை போக்க, மூன்று ஆண்டுகளுக்கு முன், 6ம் வகுப்பில் ஆங்கில வழிக்கல்வியில் சேர்ந்து, தற்போது 9ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும், தமிழ் வழிக்கல்வியில் நன்கு பயிலும் மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த மாணவர்கள், அடுத்த ஆண்டு பத்தாம் வகுப்பு பயிலும்போது, நவம்பர் மாதம் நடைபெறும் தேர்வை, எளிதாக எதிர்கொள்ளவே, இப்பயிற்சி தற்போது துவங்கியுள்ளது.
தேசிய திறனாய்வு தேர்வில் தொடர்ந்து வெற்றி பெறும் சி.பி.எஸ்.இ., மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை போல், வரும் ஆண்டில் நடைபெறும் தேர்விலும் அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி பெற, இந்த பயிற்சி வழிவகை செய்யும். இதற்காக, தமிழ் வழிக்கல்வி மாணவர்களுக்கு, பிரத்யேக பாடக்குறிப்புகள் தயார் செய்யப்படுகிறது. இதன் மூலம், தமிழ் வழி மாணவர்களும் வெற்றி பெற முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
உதவித்தொகை கிடைக்கும்
ஆண்டுதோறும் நவம்பர் மாதம் நடைபெறும் தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெறும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மாதந்தோறும், 1,250 ரூபாய் கிடைக்கும். இதேபோல், ஜனவரி மாதம் நடைபெறும் தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவி திட்ட தேர்வில் வெற்றி பெறும், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதந்தோறும், 500 ரூபாய் உதவித்தொகையாக கிடைக்கும். பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, இந்த பயிற்சி பயனளிக்கும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அர்ப்பணிப்பில் ஆசிரியர்கள்
மாவட்டத்தின் மூன்று மையங்களிலும் நடைபெறும் இப்பயிற்சி வகுப்பு, மாதத்திற்கு ஒரு முறை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் காலங்களில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, இரு நாட்கள் நடத்தவும் முடிவு செய்யப்படும். இப்பயிற்சிக்கு, முதுகலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் என, 25 பேர் பணியாற்றுகின்றனர். 
எந்தவித எதிர்பார்ப்புகளும் இன்றி, மாவட்ட கல்வி அதிகாரிகளின் உத்தரப்படி, தாமாக முன்வந்து, இப்பயிற்சி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)