MindMap drawing is the best way to remember anything
மாணவர்கள் மட்டுமல்லாமல் ஆசிரியர், பெற்றோர் எனச் சகல தரப்பிலும், நினைவாற்றல் திறன் தொடர்பான தவறான புரிதல்களும் ஐயங்களும் நிலவுகின்றன. பாடப் ப
குதிகளை மனப்பாடம் செய்வதில் இருந்து மாணவர்களின் நினைவாற்றல் தகராறு தொடங்குகிறது.
பாடக் கருத்துகளை உள்வாங்காமல், அவற்றை அப்படியே மனப்பாடம் செய்யக் கூடாது. அவ்வாறு செய்வது படிப்பது, நினைவில் இருத்துவது, தேர்வில் அவற்றை நினைவுகூர்வது என எல்லா இடங்களிலும் சிரமத்தையே உண்டாக்கும்.
சுலபமான வழி
‘மைன்ட் மேப்பிங்’ எனப்படும் ‘மன வரைபட’த்தின் அடிப்படையில் படிப்பது நமது பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் இருந்தாலும், அதனை மாணவர்கள் முறையாக பின்பற்றுவது இல்லை. ‘சிலந்தி வலைப் படம்’ என்ற பெயரில் நமது மூதாதையர்கள் பயன்படுத்திய நுட்பமே தற்போதைய மன வரைபடத்தின் அடிப்படை. இம்முறையில் பாடப்பொருளைப் புரிந்துகொண்டு, முக்கிய வார்த்தைப் பிரயோகங்களை மட்டுமே மனப்பாடம் செய்தால் போதும். வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை மனப்பாடம் செய்ய வேண்டாம். தேர்வுத் தாளைத் திருத்துபர்களுக்கும் இந்தப் பிரதான வார்த்தைப் பிரயோகங்களே தேவை. இம்முறையினால் பாடப்பொருளினைப் புரிந்துகொள்வது முதல் திருப்புதல் மேற்கொள்வது வரை அனைத்தும் சுலபமாகவும், நேர விரயமின்றியும் சாத்தியமாகும். இன்றே இப்பொழுதே பாடங்களைப் படிப்பதற்கு என்று தனியாக நாள் கிடையாது. வகுப்பறையில் ஆசிரியர் நடத்துவதற்கு முன்பிருந்தே மாணவர்கள் பாடப்பொருளை வாசிக்கத் தொடங்குவது நல்லது. அடுத்த நாள் நடத்தப்போகும் பாடத்தை முன்தினமே ஒரு முறை வாசிப்பது, புரியாத இடங்களைப் பென்சிலால் அடிக்கோடிடுவது, முந்தைய வருடங்களில் அந்தப் பாடக் கருத்தினை ஒட்டிக் கற்றதை அசை போடுவது போன்றவை பிற்பாடு படிக்கும் சிரமத்தைப் பாதியாகக் குறைக்கும். தயார் நிலையில் வகுப்பறையில் அமர்ந்திருக்கும் மாணவருக்கு ஆசிரியர் நடத்தும் பாடக் கருத்துகள், மற்ற மாணவர்களைவிட அதிகமாகவும் விரைவாகவும் புரியும். ஐயங்களைப் போக்கிக்கொள்ளவும் இந்தத் தயார் நிலையே உதவும். ஆகவே, பாடங்களைப் படிப்பதற்கு எனத் தனியாக நேரத்தை ஒதுக்குவதோ ஒத்திப்போடுவதோ கூடாது. இன்றே இப்போதே என முழு தயார் நிலையில் கற்றல் செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெற வேண்டும். நூற்றுக்கு நூறு எதிர்பார்க்கும் மாணவர்கள் மட்டுமன்றி, அனைவருமே உடலை வருத்தாமல், பரீட்சை பயமின்றிப் படிப்பதற்கு இம்முறையே கைகொடுக்கும்.
படிப்பது எப்படி?
பாடங்களை முதல் முறை மட்டுமே முழுமையாகப் படித்தால் போதும். அடுத்த தடவைகளில் ‘கீ வேர்ட்ஸ்’ எனப்படும் பாடப்பொருளின் பிரத்யேக வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு விரைவாகப் படிக்கலாம். படிக்கும் இடம் அதற்கென வழக்கமாக அமரும் இடமாக இருக்க வேண்டும், போதிய காற்றோட்டம், வெளிச்சம் ஆகிய வசதிகளுடன், தேவையான பாட உபகரணங்களை அருகில் வைத்துக்கொண்டு படிப்பைத் தொடங்கலாம். நினைவுத் திறன் அடிப்படையில் ஒரு பாடத் தலைப்பைப் படிப்பது என்பதை 5 நிலைகளாகப் பிரித்துக்கொள்ளலாம். பாடம் நடத்தும்போது கவனிப்பது, அவற்றை அன்றைய தினமோ, 24 மணி நேரத்திற்குள்ளாகவோ விரிவாகப் படித்துவிடுவது, அடுத்து வரும் 3 நாட்கள், ஒரு வாரம் மற்றும் ஒரு மாதத்திற்குள் அதே பாடத்தைக் குறுகிய அவகாசத்தில் ஒருமுறை படிப்பது ஆகியவையே இந்த 5 நிலைகளாகும். மனிதரின் நினைவுத் திறன் மற்றும் மறதியின் வேகம் தொடர்பான ஆய்வுகளின் அடிப்படையில் இப்படிப் பாடங்களைப் படிப்பது, அவற்றைப் பிற்பாடு நினைவிலிருந்து மீட்கச் சிறப்பாக உதவுகிறது. நிரந்தர நினைவுக்கு இந்த 5 நிலைகளில் படிப்பதுடன் சரியான திருப்புதல்களை மேற்கொள்ளும்போது பாடப்பொருள் தற்காலிக நினைவிலிருந்து நிரந்தர நினைவுக்குச் செல்லும். இதற்கு வார இறுதிகளில் அல்லது வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மிகக் குறைவான அவகாசத்தில் அவற்றைத் திருப்புதல் மேற்கொள்வது அவசியம். குறிப்பாக, உறங்கச்செல்லும் முன்னர் ஏதேனும் ஒரு பாடத் தலைப்பினை ‘கீ வேர்ட்’ அடிப்படையில் நினைவிலிருந்து திருப்புதல் மேற்கொண்டால், மனதில் பாடக் கருத்துகள் ஆழமாகப் பதியும்.
நாம் உறங்கிய பிறகும் மூளையானது அப்பாடக் கருத்துகளையே ஆராயும் என்்பதால், கடினப் பகுதிகள் என கருதிய பாடங்கள்கூடப் பிறகு சுலபமானதாகத் தோன்றும். களைப்பின்றிப் படிக்க பொதுத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் படிப்பதற்கு, படித்ததை எழுதிப் பார்ப்பதற்கு என நாளில் அதிக நேரம் ஒதுக்க வேண்டியிருப்பதால், அடிக்கடி களைப்பாக உணர்வார்கள். சரியான உத்திகளைப் பின்பற்றினால் இந்தக் களைப்பினை எளிதாகக் களையலாம். ஒரு மணி நேரத்தில் சேர்ந்தாற்போல 50 நிமிடங்கள் மட்டுமே படிக்கலாம். அடுத்த 10 நிமிடங்கள் ஓய்வெடுக்கலாம். அல்லது பிற பணிகளைப் பார்க்கலாம். இதே போல 2 முறை எனத் தொடர்ந்தாற்போல 2 மணி நேரம் படிக்கலாம். இதன் பிறகு 30 நிமிட இடைவெளி தேவை. இந்த இடைவெளியில் சிற்றுணவு, சிறு நடை, மூச்சுப் பயிற்சி ஆகியவை ஆசுவாசம் தரும். 50 நிமிடங்கள் படிப்பதையும் இரண்டாகப் பிரித்துக்கொண்டு, அவற்றுக்குள் ஒன்றிரண்டு நிமிடங்கள் இடைவெளி தரலாம். இந்த இடைவெளியில் அதுவரை படித்ததைத் திருப்பிப் பார்ப்பது, வெளியிலிருக்கும் மரம் போன்ற பசுமையானவற்றைப் பார்ப்பது போன்றவற்றைச் செய்யலாம். இந்த நடைமுறைகள் அலுப்பு சலிப்பின்றி மாணவர்கள் தொடர்ச்சியாகப் படிப்பதற்கு உதவும்.