மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே கருத்தொற்றுமை -ஜூலை 1 முதல் ஜி.எஸ்.டி. வரி அருண்ஜெட்லி !!
டெல்லியில் நேற்று நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் ஜி.எஸ்.டி. வரி தொடர்பான குறிப்பிட்ட அம்சங்களில் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே கருத்தொற்றுமை ஏற்பட்டது.
இதையடுத்து, ஏப்ரல் முதல் தேதிக்கு பதிலாக ஜூலை 1-ந்தேதி முதல் ஜி.எஸ்.டி. வரி நடைமுறைக்கு வருகிறது.
ஜி.எஸ்.டி. வரி
நாடு முழுவதும் ஒரே சீரான மறைமுக வரியான சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி.) முறையை கொண்டு வர மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது.
ஜி.எஸ்.டி. சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அதன் துணைச்சட்டங்களாக ஒருங்கிணைக்கப்பட்ட ஜி.எஸ்.டி, மாநில ஜி.எஸ்.டி., மத்திய ஜி.எஸ்.டி. ஆகியவற்றின் சரத்துக்களை வகுக்க ஜி.எஸ்.டி.
கவுன்சில் உருவாக்கப்பட்டது.
இதில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைவராகவும், மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் உறுப்பினர்களாகவும் உள்ளனர்.
முடிவின்றி 4 கூட்டம்
ஜி.எஸ்.டி. சட்டத்தில் பெரும்பான்மையான விஷயங்கள் முடிவு செய்யப்பட்டுவிட்ட நிலையில், வருவாயை பிரித்துக் கொள்வதில் மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே சிக்கல் நீடித்து வருகிறது. கடந்த 4 கூட்டத்திலும் எந்த முடிவும் எடுக்கப்படாமல் ஜி.எஸ்.டி.கவுன்சில் கூட்டம் முடிந்தது.
9-வது கூட்டம்
இந்நிலையில் 9-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே முக்கிய அம்சங்களில் கருத்து ஒற்றுமை ஏற்பட்டது.
குறிப்பாக ஆண்டுக்கு ரூ. 1.5 கோடி குறைவாக வருவாய் ஈட்டி, வரிசெலுத்தும் பிரிவினரில் 90 சதவீதம் பேர்களிடம் இருந்து வரி வசூல் செய்யும் உரிமை, நிர்வாகம் செய்யும் உரிமை மாநில அரசுகளுக்கு அளிக்கப்பட்டது. மீதம் உள்ள 10 சதவீதம் பேர் மட்டும் மத்தியஅரசு கட்டுப்பாட்டின் கீழ் வருவார்கள்.
ஆண்டுக்கு ரூ.1.5 கோடிக்கு அதிகமாக வருவாய் ஈட்டி, வரி செலுத்தும் பிரிவினரை 50:50 என்ற சரிபாதி அளவில் மாநில அரசுகளும், மத்தியஅரசும் பிரித்துக்கொண்டு, வரி வசூல், நிர்வாகம் செய்து கொள்ளும்.
அதேபோல, மாநில கடற்புற எல்லைக்குள் 20 கடல்மைல் தொலைவுக்குள் வரும் சரக்குக்கப்பல்களிடம் இருந்து வரி வசூலிக்க மாநில அரசுகள் கோரின.
இதில் சிறிய மாற்றம் செய்யப்பட்டு, 20 கடல்மைல் பரப்புக்கு பதிலாக, 12 கடல்மைல் தொலைவுக்குள் வரும் சரக்கு கப்பல்களிடம் மட்டுமே வரி வசூலிக்க மாநில அரசுகளுக்கு உரிமை அளிக்கப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்துக்கு பின், மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி நிருபர்களிடம் கூறுகையில், " ஜி.எஸ்.டி. வரியின் முக்கிய அம்சங்களில் மாநில அரசுகள், மத்திய அரசுக்கும் இடையே கருத்து ஒற்றுமை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக மாநிலங்களும் வரி விதிக்கவும், வரி வசூல் செய்யவும், மாநிலங்களுக்கு இடையே பொருட்கள், மற்றும் சேவைகள் செல்லும்போது வரி விதித்தல், ஆகியவற்றில் கருத்து ஒற்றுமை ஏற்பட்டது.
வரி செலுத்துவோர் மாநில அரசு, அல்லது மத்தியஅரசு ஏதாவது ஒரு நிர்வாகத்தின் கீழ் மட்டுமே கொண்டு வரப்படுவார்கள்.
பிப்ரவரி 18-ந்தேதி மீண்டும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் கூடுகிறது. அப்போது, ஒருங்கிணைக்கப்பட்ட ஜி.எஸ்.டி. சட்டத்தின் வரையறைகள், அம்சங்கள், துணைச்சட்டங்களுக்கு மாநில அரசுகளிடம் ஒப்புதல் பெறப்படும்.
ஜி.எஸ்.டி. வரி ஏப்ரல் முதல்தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என முன்பு திட்டமிட்டு இருந்தோம். ஆனால், ஜூலை 1-ந்தேதி முதல் இருந்துதான் நடைமுறைக்கு வர சாத்தியம் இருக்கிறது'' எனத் தெரிவித்தார்.