இழுத்து மூடப்படும் 10 பொறியியல் கல்லூரிகள்: 5 கல்லூரிகள் திட்டவட்ட அறிவிப்பு


          ஆண்டுக்கு ஆண்டு மாணவர் சேர்க்கை குறைந்து வரும் காரணத்தால் வருகிற 2017-18 கல்வியாண்டில் கல்லூரியை முழுவதுமாக இழுத்து மூடும் முடிவில் 10 பொ
றியியல், தொழில்நுட்பக் கல்லூரிகள் இருப்பது தெரியவந்துள்ளது.


இவற்றில் 5 கல்லூரிகள், தங்களது இந்த முடிவு குறித்து அண்ணா பல்கலைக்கழகத்திடம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டன.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆள்குறைப்பு, ஊதியக் குறைப்பு நடவடிக்கைகள் காரணமாக கடந்த 2011 -ஆம் ஆண்டு முதல் பொறியியல் படிப்புகளில் குறிப்பாக பி.டெக். தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி.), பி.இ. கணினி அறிவியல், மின்னணுவியல் தொடர்பியல் பொறியியல் (இ.சி.இ.) போன்ற பிரிவுகளின் மீது மாணவர்களின் ஆர்வம் படிப்படியாகக் குறைய தொடங்கியது. 
இதன் காரணமாக, பொறியியல் கல்லூரிகளில் படிப்படியாக மாணவர் சேர்க்கை குறைந்து, கலை -அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. 
 குறைந்த பி.இ. மாணவர் சேர்க்கை: கடந்த 2015 -ஆம் ஆண்டு பொறியியல் கலந்தாய்வில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 2,02,422 -ஆக இருந்தன. இதில் 1,07,969 இடங்கள் மட்டுமே நிரம்பின. 94,453 இடங்கள் காலியாக இருந்தன.
 இந்த ஆண்டும் மொத்தமிருந்த 531 பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றிருந்த 1,85,670 அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 84,352 இடங்கள் மட்டுமே நிரம்பின. 1,01,318 இடங்கள் மாணவர் சேர்க்கை இன்றி காலியாக இருந்தன. 
இதன் எதிரொலியாக, 2016 -ஆம் ஆண்டில் 70 துறைகளை (படிப்புகள்) 30 கல்லூரிகளும், மாணவர் சேர்க்கையை பாதியாகக் குறைக்க 20 கல்லூரிகளும் அண்ணா பல்கலைகழகத்திடம் விண்ணப்பித்தன.
 ஏஐசிடிஇ புள்ளி விவரம்: மாணவர் சேர்க்கை குறைந்ததன் காரணமாக கடந்த 2013 -ஆம் ஆண்டு முதல் முற்றிலும் மூடுவதற்கான விண்ணப்பத்தை பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகம் மூலம் ஏஐசிடிஇ-க்கு (அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில்) விண்ணப்பித்து வந்தன. 
இதை ஏற்ற ஏஐசிடிஇ 2013 -14 கல்வியாண்டில் 3 பொறியியல் கல்லூரிகளுக்கும், 2014-15 கல்வியாண்டில் 12 பொறியியல் கல்லூரிகளுக்கும், 2015-16 கல்வியாண்டில் 12 பொறியியல் கல்லூரிகளுக்கும் முழுவதும் இழுத்து மூட அனுமதி அளித்தது. 
 10 கல்லூரிகள்: இந்த நிலையில், 2017-18 கல்வியாண்டுக்கான அனுமதி நீட்டிப்பு நடைமுறைகளை ஏஐசிடிஇ தற்போது தொடங்கியுள்ளது. இதற்காக, தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளிடமிருந்து கடந்த 20 -ஆம் தேதி வரை அண்ணா பல்கலைக்கழகம் விண்ணப்பங்களை வரவேற்றது. இதற்கு விண்ணப்பிக்கும் கல்லூரிகள் மட்டுமே 2017-18 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை நடத்த முடியும். 
இந்த நிலையில், கடந்த 20 -ஆம் தேதியுடன் கால அவகாசம் முடிவடைந்த நிலையில், 12 கல்லூரிகள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவில்லை.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியது:
விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்காத 12 கல்லூரிகளில், 5 கல்லூரிகளின் நிர்வாகிகள் தங்களது கல்லூரிகளை முழுவதும் இழுத்து மூடும் முடிவில் இருப்பதாகத் திட்டவட்டமாக தெரிவிóத்துவிட்டனர். இவற்றில் 4 பொறியியல் கல்லூரிகள், ஒரு எம்பிஏ கல்லூரி ஆகும். 
 மேலும் 2 கல்லூரிகளின் நிர்வாகிகள், விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கு மேலும் கால அவகாசம் கேட்டுள்ளனர். ஆனால், மீதமுள்ள 5 கல்லூரிகள் இதுவரை எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை. எனவே, அவையும் வரும் கல்வியாண்டில் மூடப்பட வாய்ப்புள்ளது என்றார் அவர்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022