பொதுத் தேர்வு: 104 -இல் ஆலோசனை
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கான மனநல ஆலோசனைகள் தமிழக அரசின் 104 சேவை மூலம் புதன்கிழமை முதல் வழங்கப்படுகிறது.
இந்த ஆலோசனை வழங்குவதற்கான உளவியல் மருத்துவ நிபுணர்கள், உளவியல் ஆலோசகர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் கொண்ட குழுவினர் தயாராக உள்ளனர். மாணவர்கள் 24 மணி நேரமும் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம். இதில் தேர்வுக்குத் தயாராகுதல், தேர்வு காலத்தின்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், தேர்வு முடிவுகளை எதிர்கொள்வது என்று 3 பிரிவுகளாக ஆலோசனை வழங்கப்படும்.மேலும் உணவு முறை, மனஅழுத்தத்தைப் போக்குவது, நினைவாற்றலைப் பெருக்குவது, தேர்வு பயத்தைப் போக்குவது, தேர்வு முடிவுகளை எதிர்கொள்வது, தவறான முடிவுகளைத் தவிர்த்தல் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை வழங்கப்படும் என்று தமிழக அரசின் 104 மருத்துவ சேவையை அளித்து வரும் ஜிவிகே இஎம்ஆர்ஐ நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டுகளில் தேர்வு சமயத்தில் ஒரே நாளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இந்த சேவையின் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.