ஏப்., 1 முதல் 'ஸ்மார்ட் ரேஷன் கார்டு' : சட்டசபையில் கவர்னர் அறிவிப்பு.
'தமிழகத்தில், ஏப்., 1 முதல், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள் வழங்கப்படும்,'' என, சட்டசபையில், கவர்னர் வித்யா
சாகர் ராவ் தெரிவித்தார்.
தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், நேற்று சட்டசபையில் உரையாற்றினார். அவரது பேச்சின்
முக்கிய அம்சங்கள்:
* ஜெயலலிதா வழியில், முல்லை பெரியாறு அணையின், முழு கொள்ளளவான, 152 அடி வரை, நீர்மட்டத்தை மேலும் உயர்த்தி, தென் தமிழகத்திற்கு தேவையான நீர் தர, அனைத்து முயற்சிகளும் செய்யப்படும்
* பொதுமக்களின் பங்களிப்புடன், நீர் ஆதார மேலாண்மையை மேற்கொள்ள, 'குடிமராமத்து' திட்டத்தை, அரசு விரைவில் துவங்கும்; இதற்கான நிதி ஒதுக்கீடுகள், வரும் ஆண்டுகளில், படிப்படியாக உயர்த்தப்படும்
* நீர்வள, நிலவள திட்டத்தின், இரண்டாவது கட்ட திட்டப் பணிகளை, உலக வங்கி நிதி உதவியுடன், அரசு விரைவில் செயல்படுத்தும்
*பயங்கரவாத, ஜாதி, மதவாத வன்முறைகள் ஏதுமில்லாத, அமைதியான மாநிலமாக, தமிழகம் திகழ்ந்து வருகிறது. மாவோயிஸ்ட் பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி உள்ளது. சட்டம் - ஒழுங்கு நிலைமை சீராக நிலைநாட்டப்பட்டு, தமிழகம் தொடர்ந்து, அமைதிப்பூங்காவாக திகழ்கிறது
* 2016 - 17ல் துவங்கி, அடுத்த நான்கு ஆண்டுகளில், செயல்படுத்தும் வகையில், 803 கோடி ரூபாய் செலவில், 'நிலைக்கத்தக்க மானாவாரி வேளாண் இயக்கம்' விரைவில் துவக்கப்படும்
* பண்ணை இயந்திரமயமாக்கல் மற்றும் நுண்ணீர் பாசனம் போன்ற திட்டங்களை, அரசு தொடர்ந்து செயல்படுத்தும்
* மாநிலத்தின் உணவு தானிய உற்பத்தி, தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, 2015 - 16லும், 100 லட்சம் டன் என்றளவை மிஞ்சியுள்ளது
* கடலோர பகுதிகளில், மீன்பிடி தொழில் நீடித்து நிலைக்கத்தக்க வகையில், சூரை மீன்பிடி துாண்டில் படகுகள் மூலம், ஆழ்கடல் மீன்பிடிப்பை, அரசு தொடர்ந்து ஊக்குவிக்கும்
* பொது வினியோக திட்டம், தொடர்ந்து உரிய வகையில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தை வெளிப்படை தன்மையுடன், சிறப்பாக செயல்படுத்த, அதன் செயலாக்கங்கள், கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ரேஷன் கார்டுகளில், 'ஆதார்' எண் இணைக்கும் பணி முடிக்கப்பட்டு, ஏப்., 1 முதல்,
'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள் வழங்கப்படும்
* மாநில அரசின் நிபந்தனைகளை, மத்திய அரசு ஏற்றதால், தமிழகம், 'உதய்' திட்டத்தில் இணைந்தது. காலாண்டுக்கு ஒருமுறை, மின் கட்டணத்தை, மாற்றி
அமைப்பதை நீக்கவும், ஐந்தாண்டு கடனை, காலம் தாழ்த்தி தீர்க்கவும், 15 ஆண்டிற்கான, கடன் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டவும், மத்திய அரசு ஏற்றுக் கொண்டது
* தமிழக அரசு, கடன் பத்திரங்கள் மூலம், நிதி திரட்டி, தமிழக மின் வாரியத்தில், 22 ஆயிரத்து, 815 கோடி ரூபாய் கடனை ஏற்றுக் கொள்வதுடன், 3,352
கோடி ரூபாய்
அரசு கடனை, பங்கு மூலதனமாக மாற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது. இலவச மின்சார திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்
* நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் உள்ள சாயப்பட்டறைகளை சீரமைக்க, மத்திய அரசின், ஒருங்கிணைந்த பதனிடும் தொழில்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற, அரசு முயற்சி எடுத்து வருகிறது
* சென்னை, கோவை மாநகரங்களை அடுத்து, மதுரை, சேலம், தஞ்சாவூர், வேலுார்
மாநகரங்களையும், 'திறன்மிகு நகரங்கள்' திட்டத்தில், மத்திய அரசு சேர்த்துள்ளது
* ஐந்தாவது மாநில நிதிக்குழு தன் பரிந்துரைகளை, அரசுக்கு அளித்துள்ளது. அந்த அறிக்கை மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த செயல் அறிக்கை, அடுத்த சட்டசபை கூட்டத்தொடரில் வைக்கப்படும்
* நடப்பு நிதியாண்டில், கிராம புறங்களில், 1.97 லட்சம் வீடுகளும், குடிசை மாற்று வாரியம் மூலம், நகர்ப்புறங்களில், 1.35 லட்சம் வீடுகளும் கட்டப்படும். மேலும், பல வீட்டு வசதி திட்டங்களும் செயல்படுத்தப்படும்
l சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில், சுரங்க வழித்தடங்களில் பயணிகள் சேவை, விரைவில் துவக்கப்படும். வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் விம்கோ நகர் இடையிலான, முதற்கட்ட நீட்டிப்பு பணி துரிதமாக நடந்து வருகிறது. இரண்டாம் கட்ட பணிகளுக்கு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அரசு பரிசீலித்து வருகிறது.
* ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன், சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தட
திட்டத்தில், நெடுவழி கட்டமைப்புப் பணிகளை, அரசு செய்துள்ளது. அதன் மூலம், பெரிய அளவிலான தொழில் திட்டங்களை, இப்பகுதியில் அமைக்க, மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால், மாநிலத்தில் சீரான தொழில் வளர்ச்சி ஏற்படும்
* சென்னை - பெங்களூரு தொழில் வழித்தட மேம்பாட்டு திட்டத்தின் கீழ்,பொன்னேரியை, ஒரு வளரும் தொழில் மையமாக உருவாக்க, ஆரம்ப பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன* குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் தொகுப்புகளுக்கான, மேம்பாட்டு பணிகள், நான்கு இடங்களில் மேற்கொள்ளப்பட உள்ளன. புதிய தொழிற்பேட்டைகள் அமைப்பதை ஊக்குவிக்க, நிதியுதவி வழங்கும் திட்டம், தொடர்ந்து செயல்படுத்தப்படும்* சுகாதாரத் துறையில், அரசு துவங்கிய, முன்னோடி திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் *நாட்டிலேயே அறிவுசார் தலைநகராகவும்
, புதுமை முயற்சிகளுக்கான முக்கிய மையமாகவும், தமிழகத்தை உருவாக்குவதே, அரசின் தொலைநோக்கு திட்டம்
l மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லுாரி களுக்கு, தமிழகத்தில் பின்பற்றப்படும், வெளிப்படையான சேர்க்கை முறையையே, தொடர்ந்து பின்பற்ற, அரசு அனைத்து முயற்சிகளை யும் மேற்கொள்ளும்.இவ்வாறு கவர்னர் தெரிவித்தார்.
சட்டசபையில் அனைத்தும் முதல் :
* இந்த ஆண்டின், முதல் சட்டசபை கூட்டம், நேற்று நடந்தது
* ஜெயலலிதா மறைந்த பின், நேற்று முதல் முறையாக சட்டசபை கூடியது
*தமிழக கவர்னராக உள்ள வித்யாசாகர் ராவ், நேற்று முதல் முறையாக, சட்டசபையில்
உரையாற்றினார்
*ஜெயலலிதா இல்லாத நிலையில், முதல்வர் பன்னீர் செல்வம் பங்கேற்ற, முதல் சட்டசபை கூட்டம்
* சட்டசபையில், கவர்னர் உரை முடிந்த பின், முதன் முறையாக, ஜல்லிக்கட்டு மீதான தடையை அகற்ற கொண்டு வரப்பட்ட, அவசர சட்டத்திற்கு, சட்ட முன்வடிவு தாக்கல் செய்து, சட்டம் நிறைவேற்ற, மாலை சட்டசபை கூட்டம் நடந்தது. இவை அனைத்துமே, முதல் முறையான நடவடிக்கைகள்.