பிப்ரவரி முதல் வாரத்தில் பிளஸ் 2, 10ம் வகுப்புக்கு செய்முறைத் தேர்வு !!
பிளஸ் 2 தேர்வு மார்ச் 2ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 8ம் தேதியும் தொடங்க உள்ளன. பள்ளிகள் மூலம் சுமார் 20 லட்சம் மாணவ, மாணவியர் மேற்கண்ட தேர்வுகளை எழுத
உள்ளனர். பிளஸ் 2 வகுப்பில் அறிவியல் பாடப் பிரிவுகளை எடுத்து படிக்கும் மாணவர்கள் கண்டிப்பாக செய்முறைத் தேர்வு எழுத வேண்டும். இத்தேர்வுக்கு 50 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனைவரும் அறிவியல் பாடத்தில் செய்முறைத் தேர்வு எழுத வேண்டும். வரும் மார்ச் மாதம் பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ளதால் முன்னதாக செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.
இதையடுத்து, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. செய்முறைத் தேர்வுகள் நடத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் அடுத்த வாரம் சென்னையில் நடக்க உள்ளது. இதில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கலந்து கொள்வார்கள். பிளஸ் 2 வகுப்பு செய்முறைத் தேர்வுகள் காலையிலும், பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் மாலையிலும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அறிவியல் பிரிவில் மாணவர்கள் எடுத்துள்ள விருப்ப பாடங்களின்படி மாணவர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் ஒரு குழு வீதம் செய்முறைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல, பத்தாம் வகுப்பு மாணவர்கள் மதியத்துக்கு பிறகு குழுக்களாக அனுமதிக்கப்படுவார்கள். அதன்படி, செய்முறைத் தேர்வுகளை வரும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தொடங்கி 25ம் தேதிக்குள் முடிக்க தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. ஆய்வுக் கூட்டத்துக்கு பிறகு செய்முறைத் தேர்வுக்கான அட்டவணை மாவட்ட வாரியாக வெளியிடப்படும்.