ரூ.50,000க்கு மேலான பரிவர்த்தனைக்கு வரி!
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான 13 பேர் அடங்கிய முதலமைச்சர் குழு, டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும்விதமாக, வங்கிகளில் ரூ.50,000க்கும்
மேலாக மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகளுக்குக் கணிசமான தொகையை வரியாக வசூலிக்கலாம் என்ற பரிந்துரையை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய
அமைச்சரவைக்கு முன்வைத்துள்ளது. மேலும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை எளிதாக்க பல்வேறு சிறப்பு அம்சங்களையும் இக்குழு பரிந்துரைத்துள்ளது.
பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு நாட்டில், பணமில்லா பொருளாதாரம் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான 13 பேர் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டு டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க தேவையான அம்சங்கள் மற்றும் செயல்பாட்டு நடவடிக்கைகள் குறித்த அறிக்கை கேட்கப்பட்டிருந்தது.
இதன்பேரில், இக்குழு தற்போது சமர்ப்பித்துள்ள அறிக்கையில், 'ரூ.50,000க்கும் மேலாக வங்கி வழியாக மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகளுக்குக் கணிசமான தொகையை வரியாக வசூலிக்கலாம். இதன்மூலம் ஸ்மார்ட்போன் விற்பனை உள்ளிட்ட சிறு வர்த்தகர்களுக்கு, ரூ.1000 வரை சலுகை வழங்கலாம். சிறு வர்த்தகர்களிடையே பணமில்லா பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில், ஸ்வைப்பிங் எந்திரங்களை நிறுவ வங்கிகள் முயற்சிக்க வேண்டும். அத்துடன், ஸ்மார்ட்போன் வழியான பரிவர்த்தனைகளையும் அதிகளவில் ஊக்குவிக்க முன்வர வேண்டும். ஆதார் எண்ணை மையமாகக் கொண்டு பரிவர்த்தனைகள் மேற்கொள்ள வேண்டும். நாட்டில் உள்ள 1.50 லட்சம் அஞ்சல் நிலையங்களையும் சிறு வங்கிகளாக பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.