உள்ளாட்சி தேர்தல் எப்போது நடக்கும்?
'தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தல் எப்போது நடக்கும்' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. தேர்தல் தேதி விபரங்களை, 31ம் தேதி தெரிவிக்கும்படி, மாநில
தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், 2016 அக்., 17, 19ம் தேதிகளில் நடத்தப்படும் என, மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதையடுத்து, 'உள்ளாட்சி அமைப்புகளில், பழங்குடியினருக்கு முறையான ஒதுக்கீடு செய்யப்படவில்லை' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., பிரமுகர் ஆர்.எஸ்.பாரதி மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த, நீதிபதி கிருபாகரன், முறைப்படி தேர்தல் அறிவிப்பு வெளியிடவில்லை எனக்கூறி, உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை ரத்து செய்தார். கடந்த, 2016 டிசம்பருக்குள் தேர்தலை நடத்தி முடிக்கவும், புதிய அறிவிப்பை வெளியிடவும், மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, மாநில தேர்தல் ஆணையம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த, டிவிஷன் பெஞ்ச், தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டது.
இந்நிலையில், இவ்வழக்கு, நீதிபதிகள் நுாட்டி ராமமோகன் ராவ், எஸ்.எம்.சுப்ரமணியம் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பாணை, எப்போது வெளியிடப்படும் என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான, வழக்கறிஞர் குமார், ஏப்ரலுக்குள் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதை ஏற்க, நீதிபதிகள் மறுத்து விட்டனர். உள்ளாட்சி தேர்தலை எப்போது நடத்த முடியும் என்பதை, தேர்தல் ஆணையம் தெரிவிக்கும்படி, டிவிஷன் பெஞ்ச்
உத்தரவிட்டு, விசாரணையை, ஜன., 31க்கு தள்ளி வைத்தது.