இன்ஜினியரிங் படிப்புக்கு விரைவில் தேசிய நுழைவுத்தேர்வு
'நீட்' தேர்வு போல், இன்ஜினியரிங் படிப்புக்கும், தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்த, மாநில அரசுகளிடம், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., கருத்து
கேட்க உள்ளது. பிளஸ் 2 தேர்வில் வெறும் தேர்ச்சி பெற்றவர்கள் கூட, தனியார் கல்லுாரிகளில் நன்கொடை கொடுத்து, மருத்துவ படிப்பில் சேர்வதாக, மத்திய அரசுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, மருத்துவ படிப்பில் சேர, அனைத்து மாணவர்களுக்கும், 'நீட்' எனப்படும் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என, இந்திய மருத்துவ கவுன்சிலான, எம்.சி.ஐ., அறிவித்தது.
அதன்படி, தேர்வு நடத்துவது கட்டாயம் என, உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டது. இதை போல, தகுதி அடிப்படையில், இன்ஜினியரிங் கல்லுாரிகளில் மாணவர்களை சேர்க்கும் வகையில், தேசிய நுழைவுத் தேர்வு நடத்த, ஏ.ஐ.சி.டி.இ., முடிவு செய்துள்ளது. இதற்கு, மத்திய மனிதவளத் துறையும் அனுமதி அளித்துள்ளது. அதற்கு, பல தரப்பிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது. எனவே, நுழைவுத் தேர்வின் அவசியம் குறித்து, மாநிலங்களிடம் கருத்து கேட்க, ஏ.ஐ.சி.டி.இ., முடிவு செய்துள்ளது. விரைவில், இந்த கருத்து கேட்பு துவங்கும் என, உயர்கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.