தினமலர்' சார்பில் 'நீட்' தேர்வு வழிகாட்டி :சென்னையில் நாளை நடக்கிறது
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர்வதற்கான, 'நீட்' தேர்வுக்கு, வழிகாட்டும் கருத்தரங்கம், தினமலர் சார்பில், சென்னையில் நாளை நடத்தப்படுகிறது.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர, நீட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என, கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகம் உட்பட, சில மாநிலங்களில், மாநில அரசின் ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டும், நீட் தேர்வில், கடந்த ஆண்டு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு, மாணவர் சேர்க்கை நடந்தது. அனைத்து மாநிலங்களிலும் தனியார் கல்லுாரி, பல்கலைகளில், நீட் தேர்ச்சி அடிப்படையிலேயே, மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இந்த ஆண்டு, நீட் தேர்வில், தேர்ச்சி பெறுவது எப்படி? என்பது குறித்து, மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி, தினமலர் நாளிதழ் சார்பில், சென்னையில் நாளை நடக்கிறது.
தினமலர் நாளிதழுடன், எஸ்.ஆர்.எம்., பல்கலை, 'டைம்' போட்டித் தேர்வு பயிற்சி நிறுவனமும் இணைந்து, இந்த கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. தி.நகர், ஜி.என்.செட்டி சாலையிலுள்ள வாணி மகாலில், நாளை காலை, 9:30க்கு கருத்தரங்கம் துவங்கி, 12:30 மணி வரை நடக்கிறது. நீட் தேர்வை நடத்தும், சி.பி.எஸ்.இ.,யின், நிர்வாக குழு உறுப்பினர், ஜே.அஜீத் பிரசாத் ஜெயின், நீட் தேர்வு குறித்து, மாணவர்கள், பெற்றோர் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கிறார்.தேர்விற்கு தயாராவது எப்படி?: அரசு, தனியார் கல்லுாரிகளில், மருத்துவ சேர்க்கை கிடைக்கும் வகையில், நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது எப்படி? என்றும், மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான 'அப்ளிகேஷன் முதல் அட்மிஷன்' வரையிலான, சந்தேகங்களுக்கும், கருத்தரங்கில் விளக்கம் பெறலாம். நிகழ்ச்சியில் பங்கேற்க, எந்தவித கட்டணமும் கிடையாது. வல்லுனர்களின் வழிகாட்டுதல்களுடன், தேர்வுக்கான பாட விபரங்கள், மாதிரி வினாத்தாள் தொகுப்பு கொண்ட புத்தகங்கள், இலவசமாக வழங்கப்படும்.
மதுரையில் 'நீட்' தேர்வு கருத்தரங்கு தினமலர் நாளை நடத்துகிறது
மதுரையில் தினமலர் நாளிதழ் மற்றும் எஸ்.ஆர்.எம்., பல்கலை சார்பில் மருத்துவ படிப்பிற்கான 'நீட் 2017' நுழைவுத் தேர்வு கருத்தரங்கு, பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் நாளை (ஜன.,29) நடக்கிறது.
வளமான மாணவர் சமுதாயத்தை உருவாக்கும் வகையில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்க க்கு 'ஜெயித்துக்காட்டுவோம்', உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு பயனுள்ள ஆலோசனைகள் வழங்கும் 'வழிகாட்டி' உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளை ஆண்டுதோறும் தினமலர் நடத்துகிறது.
இந்த வகையில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மருத்துவ படிப்பிற்கான 'நீட்' எனும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு குறித்து மாணவர் தெரிந்துகொள்ளும் வகையிலும், அதற்கு எவ்வாறு தயாராக வேண்டும் என்பது குறித்தும், இந்தாண்டு முதல் முறையாக மதுரையில் தினமலர் இக்கருத்தரங்கை நடத்துகிறது.கருத்தரங்கு காலை 9:30 மணிக்கு துவங்கி மதியம் 12:30 மணி வரை நடக்கும். இதில் 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க அப்ளிகேஷன் முதல் அட்மிஷன் வரையான முழு விவரங்கள், தேர்வுக்குரிய பாடங்கள் எவை என்பது குறித்து வல்லுனர்கள் வழிகாட்ட உள்ளனர்.கருத்தரங்கில் மாதிரி வினாத்தாள் அடங்கிய புத்தகம் இலவசமாக வழங்கப்படும். அனுமதி இலவசம். மாணவ, மாணவிகள் பங்கேற்று பயன்பெறலாம்.நிகழ்ச்சியை நிகிதா இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆப் ஸ்டடீஸ் (சி.பி.எஸ்.இ.,) மற்றும் டைம் மேனேஜ்மென்ட் எஜூகேஷன் பிரைவேட் லிமிடெட் ஆகியன இணைந்து வழங்குகின்றன.